வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (18/05/2018)

கடைசி தொடர்பு:07:12 (18/05/2018)

பொன்.ராதாகிருஷ்ணனுடன் நீண்ட ஆலோசனை! - பா.ஜ.க-வில் இணைகிறாரா வைத்திலிங்கம்?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான வைத்திலிங்கமும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தஞ்சாவூரில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப்  பேசி கொண்டனர். இதனால் வைத்திலிங்கம் பி.ஜே.பியில் இணைய இருப்பதாகத் தகவல் பரவியதால் அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வைத்திலிங்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப்  பெற்று அ.தி.மு.க-வின் நால்வர் அணியில் முக்கியமானவர் என்கிற பெயரோடு அமைச்சராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் தோற்றார். உடனே சென்னை கிளம்பி சில நாள்கள் அங்குத்  தங்கி ஜெயலலிதாவைச்  சந்தித்தார். அப்போது அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்தார் ஜெயலலிதா. அதன் பிறகுதான் தஞ்சாவூர் திரும்பினார் வைத்திலிங்கம். பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு ஓ.பி.எஸ் - எடப்பாடிக்கும் இடையே கடுமையான மோதல்  நடந்து வந்தபோது அமைதி காத்தார். வைத்திலிங்கம் எங்கே எனத்  தேடும் அளவுக்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. அப்போதே அவர் பி.ஜே.பி செல்லப்  போகிறார் எனத்  செய்திகள் பரவி பின்னர் அடங்கியது. அதன் பிறகு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைந்து கட்சியைக் கைப்பற்றியபோது அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வைத்திலிங்கத்திடம் கொடுக்கப்பட்டது . அதன்பிறகு சசிகலாவையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கடுமையாக திட்டிப்  பேசினார்.

இதற்கிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றபோது, எங்களுக்கு எடப்பாடி போதிய முக்கியத்துவம் தருவதில்லை என வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டனர்.  அதனால் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் சரியாக கலந்துகொள்ளாமல் இருந்தார். உடல்நிலை குணமான பிறகு பழையபடி வலம் வர ஆரம்பித்தார். இந்த நிலையில், பி.ஜே.பி சார்பில் நடத்தப்படும் உழவனின் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி மற்றும் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் வந்திருந்தார்.

நிகழ்ச்சிகள் முடித்த பிறகு தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார். பொன்னார் தங்கிய அடுத்த கட்டடத்தில் வைத்திலிங்கம் தங்கியிருந்தார். இதனை அறிந்த வைத்திலிங்கம் தன் ஆதரவாளர்கள் புடைசூழ பொன்.ராதாகிருஷ்ணனை காலை 10 மணியளவில் சந்தித்தார். அப்போது எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு இருவரும் தனியாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக  மனம் விட்டுப்  பேசியிருக்கின்றனர். இதனால் வெளியே வைத்திலிங்கம் பி.ஜே.பிக்கு செல்லப்  போகிறார் எனத்  செய்திகள் பரவியது.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்,  ``காவிரி பிரச்னை நடந்துகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் வந்த மத்திய அமைச்சரை மரியாதை நிமித்தமாகச்  சந்தித்தார் அண்ணன். இதில் காவிரி தொடர்பாக நிறைய விஷயங்கள் பேசப்பட்டது . பொன்னாரும், அண்ணனின் உடல் நிலை குறித்து அக்கறையோடு விசாரித்தார். அ.தி.மு.க-வை விட்டு வெளியே சென்று பி.ஜே.பி-யில் சேர்கிறார் என அண்ணனுக்கு வேண்டாதவர்கள் சிலர் கிளப்பி விட்டிருக்கின்றனர்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க