டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் - கோவையில் பதற்றம்..!

கோவையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரின் ஆட்கள் கார்களை உடைத்து, தாக்கியதாகக் கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டி டி வி தினகரன் ஆதரவாளர்கள்

கோவை வடவள்ளி பகுதியில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்நிலையில், கூட்டம் முடிந்து சென்ற அவர்களின் கார்கள் மீது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரின் ஆட்கள் தாக்கியதாகக் கூறி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், ``கூட்டம் முடிந்து எங்களது கார்களில் திரும்பிக்கொண்டிருந்தோம். முதலில், எங்கள் மாவட்டச் செயலாளர் சேலஞ்சர் துரையின் காரைத்தான் தாக்கினர். தொடர்ந்து அடுத்தடுத்து சுமார் 15 கார்களைக் கடுமையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். இதில், 2 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். தாக்கியவர்களை விட்டுவிட்டு, எங்களை கைது செய்துவிடுவோம் என போலீஸார் மிரட்டுகின்றனர். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்றனர். இதனால் கோவை பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலனளிக்காததால் சேலஞ்சர் துரை உள்ளிட்ட டி.டி.வி ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!