வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (18/05/2018)

கடைசி தொடர்பு:07:18 (18/05/2018)

முருகப்பா குழுமம் விற்றுமுதலில் 13% வளர்ச்சி - புதிய தலைவர் பெருமிதம்!

முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் 2017-18 ம் நிதியாண்டில் 13 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், முருகப்பா குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் எம்.முருகப்பன். அவர், இந்தக் குழுமத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவர் கூறுகையில், ``பாரம்பர்யமிக்க முருகப்பா குழுமத்தின் தலைவர் பொறுப்பு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய தலைமையின்கீழ், குழுமம் பல சாதனை படைக்கத் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். 

2017-18 ம் ஆண்டு, முருகப்பா குழுமம் ஒட்டுமொத்த விற்று முதலில் 13% வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய வருவாய், ரூ.4,663 கோடியாகும். சந்தை மூலதனம் 10 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. முருகப்பா குழுமத்தின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் விற்பனை 13% உயர்ந்துள்ளது. இதில் நிதிச்சேவை பிரிவை சேர்ந்த சோழா எம்எஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. 

வளர்ச்சி

தமிழகத்தைத் தலைமையாகக் கொண்ட நிறுவனங்களாக இருந்தாலும் இந்தியாவில் 18 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறோம். சர்வதேச அளவிலும் பல நாடுகளில் ஆலைகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் ரூ.600 கோடி அளவுக்கு விரிவாக்க பணிகளுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரு நிதி ஆண்டுகளில் சுமார் ரூ.2,000 கோடி விரிவாக்க பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய இருக்கிறோம். 

விசாகப்பட்டினத்தில் பாஸ்பரிக் அமில ஆலை அமைப்பதும் எங்களது திட்டங்களில் ஒன்று. சர்க்கரை உற்பத்தி, தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகி உள்ளது. எனவே, விலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும், சர்க்கரைத்துறை வளர்ச்சி பெறும் என நம்புகிறோம். விவசாயச் சேவை மையங்கள் மன குரோமோர், நம்ம குரோமோர் போன்ற பெயர்களில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. மண் பரிசோதனை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி விற்பனை மட்டுமல்லாமல், பண்ணைக் கருவிகளும் பயன்பாட்டுக்கும் இந்தச் சேவை மையங்கள் வழிகாட்டி வருகின்றன. 

வாடிக்கையாளர் உறவு, லாபம் மற்றும் பணப்புழக்கம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பணியாளர் மகிழ்ச்சி ஆகிய நான்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை வளாகத்தில், ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலவிதமான பறவைகள் இங்கு வரத்தொடங்கியுள்ளன. ஏறத்தாழ பறவைகள் சரணாலயமாக உருவாகியுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். ஈ.ஐ.டி பாரி என்ற பெயரிலேயே, சர்க்கரை விற்பனை தொடரும். இந்தப் பெயரை மாற்றுவதற்கான தேவை ஏற்படவில்லை. மக்கள் மத்தியிலும் இப்பெயர் பிரபலமாக உள்ளது' என்றார்.