`நாகப் பாம்பை வைத்து தந்தைக்கு சதாபிஷேக பூஜை' - வனத்துறையிடம் சிக்கிய புரோகிதர்!

சதாபிஷேகத்தில் நாக பாம்பை வைத்து பூஜை நடத்தினால் ஆயுள் கூடும் என கருதி அதனை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டுள்ளார்

'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். ஆனால், கடலூரில் தனது தந்தையின் சதாபிஷேகத்தில் பாம்பை வைத்து, பயப்படாமல் பூஜைப் பரிகாரம் நடத்தியவரை வனத்துறையினர் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சதாபிஷேக பூஜை

கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர், சுந்தரேசன் (45). இவர், கடலூரில் உள்ள ஒரு கோயிலில் புரோகிதராக உள்ளார். சுந்தரேசன், தனது தந்தைக்கு 80 வயது முடிந்ததைத்  தொடர்ந்து, அவருக்கு  சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவுசெய்தார். சதாபிஷேகத்தில் நாகப்  பாம்பை வைத்து பூஜை நடத்தினால் ஆயுள் கூடும் என,  10 நாள்களுக்கு முன்பே தனது தந்தையின் சதாபிஷேக விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடுகள் செய்தார். இதில் ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர். சுந்தரேசன், பழனி என்ற பாம்பாட்டியிடம் 2 நாகப் பாம்பைக் கொண்டுவரச் செய்து, தனது பெற்றோர் முன்பு நாகப் பாம்பை வைத்து விமரிசையாக பூஜை நடத்தப்பட்டது.

அப்போது, சதாபிஷேக விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள், ஆர்வமாக இந்தப் பூஜையை செல்போன்மூலம் படம்  எடுத்தனர். மேலும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ, கடலூர் பகுதியில் வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. இதைப்  பார்த்த கடலூர் மாவட்ட வனத்துறையினர், அனுமதியில்லாமல் வனவிலங்கைத் துன்புறுத்தும் வகையில் பயன்படுத்தியதால், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுந்தரேசனைக் கைதுசெய்தனர். மேலும், இவருக்கு  பாம்பு கொடுத்த பாம்பாட்டி பழனியை போலீஸார்  தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம், கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!