வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (18/05/2018)

கடைசி தொடர்பு:10:36 (18/05/2018)

`காழ்ப்பு உணர்ச்சியால் இப்படிச் செய்கிறார்கள்' - போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆதித்தமிழர் கட்சி!

ஆதித்தமிழர் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுப.இளங்கோவன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில், ஊழியர்களை கெட்ட வார்த்தையில் பேசி, மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆதித்தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுப. இளங்கோவன் மீது திருச்செங்கோடு காவல்துறையினரால் வழக்கு  பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபற்றி ஆதித்தமிழர் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் விக்னேஷ்குமார், ''பெரிய மணலியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 27), தன் கணவர் சேகர் (35) மீது குடும்பப் பிரச்னை காரணமாக எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்  போயிருக்கிறார். அவர்கள், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச்  சொல்லியிருக்கிறார்கள்.

அதையடுத்து, மகேஸ்வரி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போனபோது, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள், எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் போய் புகார் கொடு என அங்கும் இங்குமாக 4 முறைக்கு மேல் அலைக்கழித்திருக்கிறார்கள். மகேஸ்வரி, ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவனிடம் சொல்லி, அவர் மூலமாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு யாரும் இல்லாததால், திருச்செங்கோடு டவுன் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாரதிமோகனிடம் புகார் கொடுக்க, அவர் வாங்க மறுத்து சத்தம் போட்டிருக்கிறார். இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது, இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் மிகவும் அசிங்கமாகப்  பேசியிருக்கிறார். அதையடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் சென்று எதற்காக இப்படிப் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அரசு ஊழியர்களைப்  பணி செய்யவிடாமல் தடுத்தது, ஊழியர்களைக்  கெட்ட வார்த்தைகளில் திட்டியது, மிரட்டியது எனப்  பல வழக்குகள் போட்டு, ஆதித்தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுப.இளங்கோவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுப்பிரியா வழக்குகளை நாங்கள் கையில் எடுத்துப்  போராடிவந்த காரணத்தால், எங்க கட்சியின்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் மாநில பொதுச் செயலாளரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். மாநிலம் தழுவிய அளவில் அனைத்துக் கட்சியையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் செய்வோம்'' என்றார் .

இதுபற்றி திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் பாரதிமோகனிடம் பேசியதற்கு, ''வழக்கு கொடுத்துவிட்டு காவல்துறையைத் திட்டிக்கொண்டே வெளியே சென்றார். எஸ்.ஐ-யை ஏன் திட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டார். அதையடுத்து அரசு ஊழியர்களைப்  பணி செய்ய விடாமல் தடுத்தது, ஊழியர்களை கெட்ட வார்த்தையில் திட்டி, மிரட்டியது என வழக்குப்  பதிவு செய்தோம். அதையடுத்து நீதிமன்றம் அவரை  சிறையில் அடைத்துள்ளது'' என்றார்.