`திருப்பதி ஏழுமலையான் பூஜைகளில் முறைகேடு' - முதன்மை அர்ச்சகர் குற்றச்சாட்டு!

'திருமலை ஆலய பூஜைகளில் முறைகேடுகள் நடக்கின்றன. அதிகாரிகள் ஆகம விதிகளுக்குப் புறம்பாக தன்னிஷ்டம் போல செயல்படுகின்றனர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஏழுமலையான் உக்கிரத்தில் இருக்கிறார். இதனால் பக்தர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே கேடு விளையும் எனத்  திருமலை ஆலயத்தின் முதன்மை அர்ச்சகர் ரமண தீட்சிதர் குற்றம் சாட்டியுள்ளார். 

திருமலை முதன்மை அர்ச்சகர் ரமண தீட்சிதர்

திருமலை ஆலயத்தின் முதன்மை அர்ச்சகர் ரமண தீட்சிதர், சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  ``திருமலை ஆலயத்தில் நாள்தோறும் வைகானச ஆகம முறைப்படி மிகவும் கட்டுப்பாட்டுடன், சிறந்த முறையில் பூஜைகள் நடைபெற்றுவந்தன. இவை அனைத்தும் ராமானுஜர் ஏற்படுத்திய விதிமுறைகள். அதே கட்டுப்பாட்டுடன் பூஜைகள், திருவிழாக்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், படிப்படியாக  அவை குறைந்துவருகின்றன. சாதாரணமாக, ஓர் ஆலயத்தில் சுப்ரபாதம் என்பது சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நடத்தப்பட வேண்டும். அதாவது, பிரம்ம முகூர்த்தம் எனப்படும் 4 மணியில் இருந்து 5 மணிக்குள்ளாக நடத்தப்பட வேண்டிய முறை. ஆனால், திருமலை ஆலயத்தில் மட்டும் அதிகாலை இரண்டு மணிக்கும் - மூன்று மணிக்கும் நடத்தப்படுகிறது. அதிலும் புத்தாண்டு, திருவிழாக் காலங்கள் போன்ற முக்கிய தினங்களில், நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் சுப்ரபாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு போடுகின்றனர். 

பெருமாளுக்கு  பூஜை முறைகள் செய்யும்போது மிகவும் பயபக்தியுடன் செய்ய வேண்டும். பூஜை முறை தவறினால், அது அவரது பக்தர்களை மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவது குறையும். பெருமாளின் உக்கிரம் அதிகரிக்கும். இது வேண்டுமென்றே சொல்லப்படுவது அல்ல. ஏழுமலையான் என்பவன், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்; அனைவராலும் போற்றப்படுபவன். உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதையே மிகவும் பாக்கியமாகக் கருதுகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும், சினிமாதுறையினருக்கும், தொழிலதிபர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் ஏற்ற வகையில் ஆகம பூஜை முறைகளை மாற்றி, இஷ்டம் போல நடந்துகொள்கின்றனர். இது, ஆகம முறைக்கு விரோதமானது. இதுபற்றி பல முறை எடுத்துக் கூறியும் யாரும் நடவடிக்கை எடுப்பதாகத்  தெரியவில்லை.

ஏழுமலையானுக்கு ஆண்டாண்டு காலமாக அரசர்கள், பக்தர்கள் சமர்ப்பித்த பல கோடி மதிப்புள்ள வகை வகையான ஆபரணங்கள் கணக்கெடுப்பில் வருவதில்லை. இதுகுறித்து ஆலயத்தின் முதன்மை அர்ச்சகரான எனது நேரடிப் பார்வைக்கும் கொண்டு வரப்படுவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் ஆபரணங்கள், அவற்றில் உள்ள கற்கள், எடை, மதிப்பு என்று அனைத்தும் தணிக்கை செய்யப்படுவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால், இந்தத்  தணிக்கை என்பது சமீப காலங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை. முக்கியமான பூஜைகள் சில மணி நேரம் செய்யப்பட வேண்டும் என்பது ஆகம முறை. ஆனால், அதிகாரிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இந்தப்  பூஜை முறைகள் சில நிமிடங்களில் முடிக்கப்படுகின்றன. நாள்தோறும் பல மணி நேரம் பூஜை செய்வதால், கருவறையில் இருக்கும் இறைவனின் சக்தி பெருகும்.

அவ்வாறு பூஜை செய்யப்படும் நேரங்களைக்  குறைத்தால், இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழுமலையானுக்கு  சமர்ப்பிக்கப்படும்  பிரசாதங்களும் முறை தவறி நடக்கிறது. சாதாரணமாக,  பெருமாளுக்கு என்று  செய்யப்படும் நைவேத்தியங்களின் கொள்ளவு மொத்தமும் எடுத்துவந்து கருவறையில் வைத்து நிவேதனம் செய்யப்பட வேண்டும். ஆனால், சமீப காலங்களில் கால அவகாசம் குறைத்து சிறிதளவு நைவேத்தியங்கள் மட்டுமே கருவறைக்குள் எடுத்துவந்து சமர்பித்துவிட்டு, உடனடியாக தரிசனத்திற்கு  ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் ஏழுமலையானின் பக்தர்களாகிய நீங்கள்தான் முன்னிருந்து உரிய முறையில் தீர்வு காண வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!