குட்கா ஊழலை சி.பி.ஐ விசாரிப்பதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு..!

குட்கா ஊழலை சி.பி.ஐ விசாரிக்க எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, இன்று உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.

தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைசெய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுக்க, சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, சமீபத்தில் தீர்ப்பளித்தது. 

அதன்படி, தி.மு.க-வின் கோரிக்கை ஏற்கப்பட்டு , வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணை அனைத்தும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!