இதென்ன விளையாட்டு சமாசாரமா..! பள்ளி நிர்வாகத்திடம் கொந்தளித்த ஆட்சியர்

பள்ளி கல்லூரி வாகனங்கள்

திருச்சி தீரன் நகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில், மேற்கு வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள்குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் உமாசக்தி, காவல்துறை உதவி கமிஷனர் அருணாசலம், தீயணைப்பு மீட்புப் பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி சகிதமாக, பள்ளி வாகனங்களை ஆட்சியர் ராஜாமணி ஆய்வுசெய்தார். 

அங்கு, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதில் குளறுபடிகள் இருப்பதையும், சான்றிதழ்கள் வழங்கப்படாததையும் கண்டு கடுப்பான ஆட்சியர் ராசாமணி, ஒரு மாதம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறைவிட்டிருந்தும், வாகனங்களை முழுமையாக ஆய்வுசெய்யாமல் வச்சிருக்கீங்க. இது, திருவிழாவுக்குப் போகிற விஷயமா? குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். இவ்வளவு மோசமாக, ஏனோதானோன்னு நீங்க இருப்பது தெரிந்திருந்தால், நான் ஆய்வுக்கே வந்திருக்க மாட்டேன். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வாகனங்களையும் தயார் செய்து, நல்ல முறையில் நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஆய்வுக்காக மட்டும் வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்துவது சரியல்ல என்றவர்,

என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி வாகங்களை முழுமையாகவும், முறையாகவும் ஆய்வுசெய்து சான்றிதழ்கள் வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை நிச்சயம் இருக்கும். தயங்க மாட்டேன் எனக் கடுமையாக எச்சரித்தார். 

17 பள்ளி, கல்லூரி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து. இறுதியாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி, 'பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களைத் தகுதிநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் நேற்று ஆய்வுசெய்யப்பட்டன. இதில், 17 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன. ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்குத் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு, 152 ஓட்டுநர்களில் 16 ஓட்டுநர்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு கருவிகள்மூலம் தீயை அணைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!