வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (18/05/2018)

கடைசி தொடர்பு:12:56 (18/05/2018)

எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த அம்மாநில ஆளுநருக்கு எதிராகத் தொடரப்பாட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கர்நாடக சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா, நாளை மாலை பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றம்

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றிபெற்றன. மதச் சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது. முல்பாகல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றார். ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், மற்றொரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததன் பேரில், நேற்று எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டார் எனக் கூறி, அவர்மீது காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மறு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜூன் குமார், சிக்ரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார், பா.ஜ.க வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி. 

இதுகுறித்து தெரிவித்த நீதிபதி, 'பெரும்பான்மை இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூறிய நிலையில் பா.ஜ.க-வை மட்டும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஏன்? எதன் அடிப்படையில் நிலையான ஆட்சி அமையும் என ஆளுநர் முடிவுசெய்தார்? எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பா.ஜ.க வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி,  ‘ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை. நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கூடாது. கால அவகாசத்தை உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம்’ எனக் கூறினார். 

இதற்கு எதிர்வாதம் செய்த காங்கிரஸ் வழக்கறிஞர் அமிஷேக் சிங்வி,  ‘பெரும்பான்மையை யார் முதலில் நிரூபிக்க வேண்டும் என்பது தான் முதல் கேள்வி. நம்பிக்கை வாக்கெடுப்பு கோர எங்களுக்குத்தான் முதலில் வாய்ப்பு தர வேண்டும். நாளையே நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார். காலதாமதமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். எம்.எல்.ஏ-க்கள், அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுசெய்ய வேண்டும்.’ எனக் கூறினார். 

காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், 'எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவுசெய்யும் சுதந்திரம் அவருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிக்ரி,  ‘கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள்தான் உள்ளன. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் சிறந்த வழி. அதில் யாரை முதலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பது என்பதுதான் கேள்வி. நாளை மாலை சட்டப் பேரவையில் எடியூரப்பா அவரது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு அம்மாநில காவல்துறை தலைவர் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.