மழை தமிழகத்துக்கு... நீர் கேரளாவுக்கு... தடுப்பணை உடைந்ததால் பறிபோகும் தண்ணீர்! | dams are damaged In coimbatore, water goes waste

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (18/05/2018)

கடைசி தொடர்பு:13:43 (18/05/2018)

மழை தமிழகத்துக்கு... நீர் கேரளாவுக்கு... தடுப்பணை உடைந்ததால் பறிபோகும் தண்ணீர்!

கோடை  காலம், இப்படி மழையைக் கொடுக்கும் கொடை காலமாக இருக்கும் என கோவை மக்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை கொட்டியுள்ளது. தற்போதுவரை 218 மி.மீ மழையை கோவை பெற்றுள்ளது. இது சராசரி அளவைவிட, 79 சதவிகிதம் அதிகம். தென்மேற்கு பருவமழை காலகட்டத்திலும் கோவைக்கு நல்ல மழைப் பொழிவு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மழை தமிழகத்துக்கு... நீர் கேரளாவுக்கு... தடுப்பணை உடைந்ததால் பறிபோகும் தண்ணீர்!

கோடைக்காலம், இப்படி மழையைக் கொடுக்கும் `கொடை'க்காலமாக இருக்கும் என கோவை மக்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை கொட்டியிருக்கிறது. தற்போதுவரை 218 மி.மீ மழையை கோவை பெற்றுள்ளது. இது சராசரி அளவைவிட, 79 சதவிகிதம் அதிகம். தென் மேற்குப் பருவமழை காலகட்டத்திலும் கோவைக்கு நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மதுக்கரை

ஆனால், அப்படிப் பெய்யும் மழைநீரைச் சேமிக்க வழியில்லாமல், அண்டை மாநிலமான கேரளாவுக்குத் தாரைவார்த்து வருகிறோம்.  கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், குரும்பபாளையம் பகுதியில், 3 மற்றும் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு குட்டைகள் உள்ளன. இந்தக் குட்டைகளுக்கு அறிவொளி நகர், கோவைப்புதூர், பி.கே.புதூர், இடையர்பாளையம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், பிள்ளையார்புரம், மைல்கல் போன்ற பகுதிகளில் இருந்து மழைநீரும், செங்குளத்தின் உபரிநீரும் வந்து சேரும்.

இங்கு சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு, பொதுப்பணித் துறை சார்பில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன. நாளடைவில் பலவீனமான அந்த அணையின் தடுப்புச் சுவர்கள், கடந்த ஆண்டு இடிந்து விழுந்துவிட்டது. இதனால், நல்ல மழை பெய்தும், கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர், கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மணிகண்டன்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ``இந்தப் பகுதியில் தண்ணீர் இருந்தால், இங்கு பசுமை செழிக்கும் என்று கூறித்தான் அணை கட்டினார்கள். இதை, `பாலக்காட்டுக் கணவாய்' என்றும் கூறுவார்கள். மழை மேகங்கள் இங்கு அதிகம் உருவாகும். இங்கு தண்ணீர் நின்றால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக மழைப் பொழிவையும் கொடுக்கும். அப்படிப் பெய்யும் மழையையும் நாம் சேமிப்பதில்லை. ஒவ்வொரு நீர்நிலைக்கும், தடுப்பணை கட்டி அதைச் சேகரிப்பது முக்கியம்.

இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 தடுப்பணைகள் உடைந்துள்ளன. அவற்றைச் சீரமைப்பதன் மூலம், பெய்யும் மழைநீரைச் சேமிப்பது மட்டுமல்லாமல், அதிக மழைப்பொழிவு கொடுக்கவும் இது உதவும். குறிப்பாக, கோவையில் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்க அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும்” என்றார்.

செல்வராஜ்குரும்பபாளையம் விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வராஜ், ``இந்த நீர்நிலையை நம்பித்தான், இங்கு 400 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 15,000 குடும்பங்களுக்கு முக்கிய நீர் ஆதாரம் இதுதான். தடுப்புச் சுவர் இடிந்துள்ளதால், இங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரின் அளவும்  வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், விவசாயமும் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்திருப்பதால் நிலைமையை ஓரளவுக்குச் சமாளித்து வருகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ளோம்.  அதேபோல, சில தனியார் நிறுவனங்களும் உதவுவதாக உறுதியளித்துள்ளனர். விரைவில், இங்கு தடுப்பணைகள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இவை மட்டுமல்ல, கோவையைச் சுற்றியுள்ள ஏராளமான குட்டைகள் மற்றும் குளங்களின் தடுப்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக, போதிய நிதி இல்லாததால், அவற்றைப் பராமரிக்க முடியாமல் பொதுப்பணித் துறை திணறி வருகிறது. இந்த இரண்டு தடுப்பணைகளைச் சீரமைப்பதற்கு மட்டும், 60 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பராமரிப்பதற்கே, ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது.

மதுக்கரை, மழை நீர்

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டபோது, ``போதிய நிதி இல்லாததால்தான், தடுப்புகளைக் கட்ட முடியவில்லை. இரண்டு குட்டைகளுக்கும் தடுப்பணை கட்ட வேண்டுமென்றால், சுமார் 63 லட்ச ரூபாய் ஆகும் எனத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், என்னுடைய பகுதிக்கு மட்டுமே, நீர்நிலைகளைப் பராமரிக்க 5 லட்ச ரூபாய்தான் ஒதுக்குகிறார்கள். அது நீர்நிலைகளைத் தூர் வாருவதற்கே போதுமானதாக இல்லை. ஒவ்வோர் ஆண்டும், `கூடுதல் நிதி ஒதுக்குங்கள்' எனக் கூறி வருகிறோம். ஆனால், ஒதுக்குவதில்லை. தடுப்புகளை அமைக்கச் சில தனியார்களிடமும் பேசியுள்ளோம். எங்களால், முடிந்தவரையில், அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்து வருகிறோம்” என்றார்.

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ சண்முகம், “இது சம்பந்தமாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மாவட்ட ஆட்சியரிடமும் எடுத்துரைத்துள்ளோம். விரைவில், தடுப்பணை கட்டப்படும்” என்றார்.

இயற்கை தரும் கொடையையும் சேமிக்க முடியாமல் இருப்பதுதான் வேதனை.


டிரெண்டிங் @ விகடன்