`ஸ்டாலின் தலைமையில் தினகரனா?' - ராகுல்காந்தி உத்தரவால் திணறும் திருநாவுக்கரசர் | rahul gandhi urges Thirunavukkarasar to join stalin and dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (18/05/2018)

கடைசி தொடர்பு:13:46 (18/05/2018)

`ஸ்டாலின் தலைமையில் தினகரனா?' - ராகுல்காந்தி உத்தரவால் திணறும் திருநாவுக்கரசர்

`தினகரனுக்கு வந்து சேரக்கூடிய வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள்தான். அவரை இந்த அணிக்குள் கொண்டு வாருங்கள்' எனத் திருநாவுக்கரசருக்கு உத்தரவிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. 

ஸ்டாலினுடன் ராகுல்காந்தி

ர்நாடக சட்டமன்றக் காட்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ராகுல்காந்தி. ' தினகரனுக்கு வந்து சேரக் கூடிய வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள்தான். அவரை இந்த அணிக்குள் கொண்டு வாருங்கள்' என திருநாவுக்கரசருக்கு உத்தரவிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் இருக்கின்றது. அதற்குள் மூன்றாவது அணி முயற்சியைத் தொடங்கி வைத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவரது இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியை சந்தித்துவிட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் அரங்கேறிய ஓரிரு நாள்களில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசினார் ராகுல்காந்தி. இந்த சந்திப்பு அரசியல்ரீதியாக பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது. ' மூன்றாவது அணியை தி.மு.க தேர்வு செய்தால், வி.சி.க, இடதுசாரிகள், தே.மு.தி.க, தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான அணியை காங்கிரஸ் கட்டமைக்கும்' என அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தனர். இந்தக் கருத்துக்கு வி.சி.கவின் அடுத்தகட்ட நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா உள்ளிட்டவர்களும் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ' மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளுங்கள். இந்த அணிக்குள் தினகரன் வர வேண்டும்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ராகுல்காந்தி. 

தினகரன்காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுக் கிடைத்த மோசமான அனுபவத்தை உணர்ந்திருக்கிறார் ராகுல்காந்தி. அதுபோன்ற ஒரு சூழல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதுதொடர்பாக, மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரிடம் விரிவாக விவாதித்திருக்கிறார். இந்த சந்திப்பில், ' தினகரனுக்கு ஆறு முதல் 8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என அறிக்கை ஒன்று சொல்கிறது. அது என்னுடைய கையிலும் இருக்கிறது. இவை அனைத்தும் அ.தி.மு.க வாக்குகள் அல்ல. பா.ஜ.கவால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் வந்து சேர்ந்தவை. கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் அவர்களது சொந்த சமுதாய வாக்குகளும் இதற்குள் அடக்கம். சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கக் கூடிய வாக்குகளாகவும் இருக்கின்றன. 98 மற்றும் 99 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட சாதகமான அலை, இந்தமுறை தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது.

தி.மு.கவைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் நாம் இறங்க வேண்டாம். இந்த அணிக்குள் தினகரனும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை வேகப்படுத்துங்கள்' எனக் கூறியிருக்கிறார். இதனையொட்டித்தான், ' எங்கள் அணிக்குள் தினகரனும் வர வேண்டும்' என திருநாவுக்கரசர் பேசினார். இதற்குப் பதில் கொடுத்த தினகரனோ, ' போகாத ஊருக்கு வழி சொல்கிறார் திருநாவுக்கரசர்' என விமர்சித்தார். இருப்பினும், சசிகலா மூலமாக இந்த முயற்சிக்கு சம்மதம் பெறும் வேலையில் இருக்கிறார் திருநாவுக்கரசர். அப்படியே, தினகரன் இந்த அணிக்குள் வந்தாலும், 'ஸ்டாலின் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா?' என்ற கேள்வி எழுந்தபோது, 'அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு' என சீனியர் நிர்வாகிகள் சிலர் உறுதியளித்தனர். ராகுலின் கட்டளையை நிறைவேற்றும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் திருநாவுக்கரசர்" என்றார் விரிவாக. 

" தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் அணிக்குள் வருவதற்கு, தினகரன் தயக்கம் காட்டுவதன் பின்னணியில் சில விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த முதல்வர் என்ற கனவில் இருக்கிறார் டி.டி.வி. அன்புமணிக்கும் இதே கனவுதான். தி.மு.க தலைமையிலான அணிக்கு சிக்னல் கொடுத்துவிட்டால், ஸ்டாலினுக்குப் பின்னால்தான் இவர்கள் அணிவகுக்க வேண்டும். ஒருபோதும், முதல்வர் கனவை அடைய முடியாது. 'அ.தி.மு.க தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்ற பிரசாரத்தையும் செய்ய முடியாது. காலம்காலமாக, தி.மு.க எதிர்ப்பால்தான் அ.தி.மு.க வளர்ந்து கொண்டிருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அ.தி.மு.கவின் அடிமட்டத் தொண்டர்களை குறிவைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க எதிர்ப்பு என்ற அடிநாதத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படும். அரசியல்ரீதியாகவும் பலனடைய முடியாது என்பதால் தீவிர யோசனையில் இருக்கிறார் தினகரன். அதனால்தான், 'போகாத ஊருக்கு வழி சொல்கிறார்' என திருநாவுக்கரசரைச் சாடினார். அதேநேரம் சசிகலா வட்டாரத்திலோ, ' காங்கிரஸ் அணியில் இருந்து வெற்றிபெற்றால், மத்திய அமைச்சரவையில் நிதித்துறை உள்ளிட்ட வலுவான சில துறைகளைப் பெற முடியும். அதற்கான உத்தரவாதத்தை இப்போதே நாம் வாங்கிவிட வேண்டும்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர்" என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.