வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (18/05/2018)

கடைசி தொடர்பு:14:54 (18/05/2018)

சென்னை போலீஸாரால் வழிப்பறி கொள்ளையனுக்கு நேர்ந்த துயரம்!

சென்னை போலீஸாரிடம் சிக்கிய வழிப்பறிக் கொள்ளையன் அந்தோணி, இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழிப்பறி 

சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இதனால், கொள்ளையர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தென்சென்னையில் உள்ள கொள்ளையர்கள் பட்டியலில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அந்தோணியின் பெயரும் உள்ளது. இவர்மீது பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், வழிப்பறி சம்பவம் தொடர்பாக அந்தோணியை நேற்றிரவு போலீஸார் பிடித்துள்ளனர். அவருக்கு வயது 21. அவரிடம் விடிய விடிய போலீஸார் வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை, அந்தோணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தோணியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

போலீஸ் விசாரணையில் இருந்த கொள்ளையன் அந்தோணி மரணமடைந்த தகவலறிந்ததும் கூடுதல் கமிஷனர் சாரங்கன், நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் அவர் விசாரணை நடத்தினார். இதற்கிடையில் அந்தோணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் நீலாங்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வழிப்பறி வழக்கு தொடர்பாக அந்தோணியிடம் விசாரணை நடந்தது. அவரை நாங்கள் பிடித்ததும் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவர் இறந்துவிட்டார்'' என்றனர். 
இந்தச் சம்பவம் சென்னை போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.