உலக அருங்காட்சியக தினம்! - சென்னை அருங்காட்சியகத்தில் ஆறு நாள் கொண்டாட்டம்

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, சென்னை அருங்காட்சியகத்தில் நாளை முதல் ஆறு நாள்களுக்கு வரலாறு, தொல்லியல், மரபு, ஓவியம் சார்ந்த சிறப்பு கருத்தரங்கமும் காட்சியரங்கமும் நடத்தப்பட உள்ளன.

 சர்வதேச அருங்காட்சியக தினம், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி  கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஒரு நாட்டின் மரபுரிமைகளை பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. வாழும் வரலாறாக நாளைய தலைமுறைக்கு நம் வரலாற்றைச் சுமந்து நிற்கும் காலப்பெட்டகமாக அருங்காட்சியகம் இருந்துவருகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1977-ம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். அதுபோல இந்தியாவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான  அருங்காட்சியகமாக விளங்குகிறது. 1851-ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், சுமார்  6.25 ஏக்கர் (66,000 சதுர மீட்டர்) பரப்பளவில், ஆறு கட்டடங்களுடனும் 46 காட்சிக் கூடங்களுடனும் விளங்குகிறது. இதில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் என ஆறு துறைகள் உள்ளன.

 உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நாளை முதல் (19.5.2018) வரும் வியாழன் வரை (24.5.2018) வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஓவியர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கெடுத்து, வரலாற்றுப் பார்வைகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!