வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (18/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (18/05/2018)

``கிரண்பேடி செயல்பாடு நன்றாக உள்ளது” சொல்கிறார் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு நன்றாக இருப்பதால்தான் அவரை அடிக்கடி சந்திக்கிறேன் என்று புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி கடற்கரையில் தலைமைச் செயலகத்துக்கு எதிரில் செயற்கை மணல் பரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் இந்தப் பணியை அமைச்சர் கந்தசாமி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாதந்தோறும் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் சில தொகுதிகளில் ஏற்கெனவே அரிசி வழங்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று அரிசி வழங்கப்படுகிறது. மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். மக்களுக்குப் பணி செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம். கடலில் நிறைய பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் கலந்திருப்பதைப் பார்த்தேன். புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முடிவு செய்தபடி, இன்னும் 2 மாதத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளால் கழிவு நீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பைகள், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.  அதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

``முதல்வரின் ஆலோசனை இல்லாமல் நீங்கள் கவர்னரை சந்திக்கிறீர்கள்? உங்களுக்கும் முதல்வருக்குமிடையே கருத்து வேறுபாடு உள்ளதா?''

``கவர்னரை சந்தித்தபின்தான் பணிகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகதான் நிர்வாகியான கவர்னரை சந்திக்கிறேன். எனக்கும், முதல்வருக்குமிடையே எவ்வித கருத்து வேறுபாடுகளுமில்லை. எங்கள் இருவருக்குமிடையில் தனிப்பட்ட முறையில் விரோதமும் இல்லை. கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காக பாடுபட வேண்டும்”

 ``தொடர்ந்து கவர்னர் கிரண்பேடியை சந்திக்கிறீர்களே, அவரது செயல்பாடு எப்படி உள்ளது?''

``கவர்னரை தொடர்ந்து சந்திப்பதால் அவரது செயல்பாடு நன்றாக உள்ளது என்றுதான் அர்த்தம். மக்களுக்குப் பணி செய்யவே கவர்னருடன் நான் நெருக்கமாக உள்ளேன்”

கந்தசாமி

கிரண்பேடி புதுச்சேரிக்கு ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அனைத்து அமைச்சர்களும் அடக்கி வாசிக்க அமைச்சர் கந்தசாமி மட்டும்தான்தான் கிரண்பேடியை விமர்சனங்களால் வறுத்தெடுத்தார். உதாரணத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துறைமுகப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரி அரசின் திட்டங்களை நிறுத்துவதிலேயே ஆளுநர் குறியாக இருக்கிறார். அவரின் இப்படியான செயல்களால் பிற தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன் வரவில்லை. ஆக மொத்தம் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் எதிரியாக செயல்பட்டு வருகிறார். மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஆளுநருக்கு அதிக அக்கறை இருக்குமா?” என்று விமர்சித்திருந்தார். தற்போது அவரே கிரண்பேடியை வானளாவ புகழ்ந்திருப்பது காங்கிரஸ்காரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க