வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (18/05/2018)

`அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படும் போலீஸார்': டி.டி.வி ஆதரவாளர்கள் புகார்.!

போலீஸார், ஆளுங்கட்சி அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள்

கோவை வடவள்ளி பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, கூட்டம் முடிந்து வெளியே வந்தவர்களை உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர்கள் சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்தும், இரு பெண்கள் உட்பட பத்துப் பேரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, வடவள்ளி கருப்புசாமி கோயில் அருகே, டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 59 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை இரண்டு மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவு இரண்டு மணியளவில் குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதனையடுத்து, தாக்கியவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர்கள் மீது 147, 148, 188,341 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  இன்று காலை அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பொய் வழக்கு போட்டதாக கூறி, போலீஸார் மற்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணியைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர மாவட்டச் செயலாளர் சேலஞ்சர் துரை, ``பொய் வழக்கு போட்டு எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். எங்களை அடித்தும், காரை சேதப்படுத்தியதற்கும் வழக்கு பதிவு செய்யாமல், ஆளுங்கட்சி அமைச்சருக்குச் சாதகமாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் போலீஸார் செயல்படுகின்றனர்" என்றார்.