வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (18/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (18/05/2018)

அதற்கான காலம் விரைவில் வரும்..! விருதுநகரில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை நெல்லையிலிருந்து கிளம்பிய கமல்ஹாசன் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரவேற்புகளைப் பெற்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

கமல்ஹாசன்

இராஜபாளையம் ஜவஹர் திடலுக்கு மதியம் 1:30 மணிக்கு வந்த அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கடும் வெயிலிலும் காத்துக்கொண்டிருந்த தொண்டர்களிடம் சுருக்கமாகப் பேசினார். அதற்கு முன்னதாக நலிவடைந்த தொண்டர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவராணம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், `இந்தப் பயணத்தை அனைவருக்கும் நன்றி சொல்லும் பயணமாகக் கருதுகிறேன். இத்தனை நாள் என்னை வாழவைத்த மக்களுக்குத் தற்போது நன்றி சொல்கிறேன். 

நீங்கள் எனக்காக இந்த வெயிலைக் கூட பாராமல் காத்துக்கிடக்கிறீர்கள். அதற்காக வெறும் நன்றி மட்டும் நான் சொல்லிவிட்டு சென்றுவிடமுடியாது. கண்டிப்பாக ஏதாவது செய்தாகவேண்டும். கண்டிப்பாகச் செய்வேன். அதற்கான காலம் விரைவில் வரும்’’ என்றார். பின்னர் 2:15 மணியளவில் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், `குறுகிய காலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம், கொடி, கொடியின் வண்ணம் என்று அனைத்தும் மக்கள் மத்தியில் முழுமையாகப் பதிந்துள்ளது. அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் செயலியான மய்யம் விசிலைப் பயன்படுத்தி நாளைய தமிழகத்தைக் காக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்தார். பின்னர், தொண்டர் ஒருவரின் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றிவைத்துக் கிளம்பினார் .