வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (18/05/2018)

கடைசி தொடர்பு:16:09 (18/05/2018)

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் கொள்ளையன் அந்தோணி இறந்தது எப்படி? - திடுக் தகவல்

சென்னை நீலாங்கரை போலீஸாரிடம் சிக்கிய கொள்ளையன் அந்தோணி, இறந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை நடந்தபோதே நிலைதடுமாறிய அவரை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச்சென்றபோதுதான் அவர் இறந்துள்ளார்.  

கொள்ளையன்

 

 சென்னை நீலாங்கரை, பல்கலைக்கழக நகரில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த கொள்ளையன்
 அந்தோணி மீது போலீஸாருக்குச் சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், நேற்றிரவு நீலாங்கரையில் ரோந்து சென்ற போலீஸாரிடம் அந்தோணி சிக்கினார். குற்றவாளிகளைக் கண்டறியும் மொபைல் ஆப்ஸ் மூலம் போலீஸார் அவரை அடையாளம் கண்டனர். பிறகு, அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் இறந்துள்ளார். 

 இந்தத் தகவல், கூடுதல் கமிஷனர் சாரங்கனுக்குத் தெரிந்ததும், நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தினார். பிறகு அவர் கூறுகையில், "அந்தோணி உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக  நீதித்துறை விசாரணை நடத்தப்படும். அதன்பிறகே என்ன நடந்தது என்பது தெரியும்" என்றார். 

அந்தோணி எப்படி இறந்தார் என்று போலீஸார் கூறுகையில், `அந்தோணி மீது அடிதடி, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பேராசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக விசாரித்தபோது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தோணி இறந்தது எப்படி என்பதை எங்களின் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். நீதித்துறை விசாரணையின்போதும் அதைத் தெரிவிப்போம்' என்றனர். 

 பெயரைக் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொள்ளை வழக்கில் தொடர்புடைய அந்தோணி மற்றும் அவரின் கூட்டாளிகள் ஒரு வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற ரோந்து போலீஸாரிடம் 21 வயதாகும் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரைப் பிடித்தபோதுதான், பிரபல கொள்ளையன் அந்தோணி என்று தெரிந்தது. நீலாங்கரை, பல்கலைக்கழக நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது. இந்த வழக்கில் மல்லிகா என்ற பெண் மட்டும் போலீஸாரிடம் பிடிப்பட்டார். கொள்ளைச் சம்பவத்தில் மல்லிகாவுடன் சேர்ந்து மூன்று ஆண்கள் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அந்தோணி  மீதும் போலீஸாருக்குச் சந்தேகம் இருந்தது. அதுதொடர்பாக அவரிடம் விசாரித்தோம். ஆனால், எந்தவிதத் தகவலையும் அவரிடமிருந்து பெறமுடியவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவரால் பேச முடியவில்லை. நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். அவரின் நிலைமையைப் பார்த்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம்" என்றார்.

 நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் பல வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. இதனால்தான் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் வழக்கை துரிதப்படுத்திய நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸார், அந்தோணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் இறந்துள்ளார். இது, நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸாருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தோணி இறந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவல் அதிகாரி ஒருவர்மீது ஏற்கெனவே இதுபோன்ற லாக்அப் டெத் சர்ச்சை உள்ளது. தற்போது, இரண்டாவது முறையாக மீண்டும் லாக்அப் டெத் சிக்கலில் அவர் சிக்கியிருக்கிறார் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

தோழி வீட்டில் திருடிய நகைகள்: 

திருடிய நகைகளை கண்ணகி நகரில் உள்ள தோழி வீட்டில் அந்தோணி, கொடுத்து வைப்பதுண்டு. நீலாங்கரை போலீஸ் எல்லைக்குள் நடந்த கொள்ளை சம்பவத்தில் 80 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போதுதான் அந்தோணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். 

பெரும்பாலும் கொள்ளையர்களிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்வதற்குள் பல்வேறு சிரமங்களைப் போலீஸார் சந்திப்பதுண்டு. கொள்ளையர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் நகைகளைப் பெற முடியாது. இதனால், கொள்ளையர்களைத் தங்கள் பாணியில் கவனித்தால் மட்டுமே கொள்ளையடித்த நகைகளை மீட்க முடியும். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சில நேரங்களில் விசாரணையின் எல்லை மீறும்போது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.