ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு! - தூத்துக்குடி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திடக் கோரி மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

sterlite factory

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 90 நாள்களுக்கும் மேலாக குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம் உள்ளிட்ட 21 கிராம மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆலை இயக்கப்படுவதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதுப்பித்தல் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆலையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்,  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வாகனத்தில் சென்ற போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இயந்திரங்கள், ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அளித்திடக்கோரி ஸ்டெர்லைட் நிறுனத்தின் பொது மேலாளர் சத்தியப்பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``எங்கள் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராடி வருகின்றனர். ஆலையின் முன்பகுதியில் கூட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டரை மாதத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து, சிப்காட் மற்றும் தெற்கு காவல்நிலைய போலீஸார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 26 ம் தேதி ஆலை கேட் முன்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆலையில் திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு வகையான ரசாயனப் பொருள்கள் உள்ளன. போராட்டங்களால் ஆலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வரும் மே-22ம் தேதி பெரியளவில் ஆலை முன்பு போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதில், சிலர் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனவே, ஆலை வளாகத்திலிருந்து 1 கி.மீ., தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும், ஆலை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்திடவும் போராட்டம் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சூழ்நிலைக்குத்  தகுந்தபடியும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத படியும் வரும் 21ம் தேதிக்குள் ஆட்சியர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!