`நாங்கள்தான் மெஜாரிட்டி’ - பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

கோவா, பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அம்மாநில எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் 78 இடங்களிலும் பா.ஜ.க 104 இடங்களிலும், ம.ஜ.த 38 இடங்களிலும் சுயேச்சை, மற்ற கட்சிகள் என இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ம.ஜ.த-வுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததால் இரு கட்சிகளின் கூட்டணி எண்ணிக்கை 116 ஆக இருந்தது. இதனால் ம.ஜ.த-வை ஆட்சியமைக்க அழைக்கும்படி கர்நாடக ஆளுநருக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதே நேரம் தாங்களே பெரும்பான்மையாக வெற்றிபெற்றுள்ளோம். எனவே, தங்களை ஆட்சியமைக்க அழைக்கும்படி பா.ஜ.க-வும் ஆளுநருக்குக் கடிதம் வழங்கியிருந்தது. இந்நிலையில், பெரும்பான்மையைக் காரணம்காட்டி ஆளுநர் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். ஆளுநரின் இந்தச் செயல் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் தேர்தல் நடந்த கோவா, பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளே பெரும்பான்மையாக வெற்றி பெற்றன. ஆனால், பா.ஜ.க மற்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடகாவில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளன. கோவா, பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளே பெரும்பான்மையாக வெற்றிபெற்றுள்ளன. எனவே, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்கள் இன்று அந்தந்த மாநில ஆளுநர்களைச் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். இதனால் பா.ஜ.க-வுக்கும் கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!