வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (18/05/2018)

காசி விஸ்வநாதர் கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரைப் பத்திரமாகத் தரைக்கு அழைத்து வந்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரைப் பத்திரமாகத் தரைக்கு அழைத்து வந்தனர். 

காசி விஸ்வநாதர் கோயில் கோபுரம்

நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சாரலுக்குப் பெயர் பெற்ற குற்றாலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில் எப்போதும் சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருக்கும். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கான நுழைவு வாயிலாக அமைந்திருக்கும் பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்குள் நுழையும்போதே மூலிகை மணம் வரவேற்கும்.         

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், காசி ஆலயத்துக்கு நிகரான சிவத்தலமாக விளங்குகிறது. அதனால் இந்தக் கோயிலில் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அத்துடன், சிசிடிவி கேமரா கண்காணிப்பும் உள்ளது. இத்தகைய கடுமையான பாதுகாபையும் மீறி, இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அவர் எதற்காகக் கோபுரத்தின்மீது ஏறினார் என்பது தெரியாததால், காவல்துறையினர் தடுமாறினார்கள். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபுரத்தின்மீது நின்ற இளைஞரிடம் பேச்சுக் கொடுத்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் அவரைப் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்திருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கோயில் கோபுரத்தின்மீது ஏறியவர், தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் என்ற 29 வயது இளைஞர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பை மீறி ஒருவர் ராஜகோபுரத்தின்மீது ஏறிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.