வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (18/05/2018)

கடைசி தொடர்பு:18:58 (18/05/2018)

"பிரைவேட் ஸ்கூல்லதான் நல்லா படிக்க முடியும்னு சொல்றது ஆச்சர்யமா இருக்கு!’’ - சாதித்த அரசுப் பள்ளி மாணவி அபர்ணா

கவர்மென்ட் ஸ்கூல்ல நிறைய விளையாட்டுப் பொருள்கள் தரணும், பாத்ரூம் இன்னும் சுத்தமா இருக்கணும். இதுமட்டும்தான் சரிசெய்யணும். மத்தபடி, கவர்மென்ட் ஸ்கூல்தான் எனக்குப் புடிக்குது

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தேர்ச்சிவிகிதம் அதிகமாக இருப்பதாக தகவல். `தனியார் பள்ளிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை.

அபர்ணா

அரசுப் பள்ளிகளைக் குறைத்து எடைபோடும் தன்மை மாற வேண்டும் எனப் பல கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் ஜொலித்தவர்களிடம் பேசலாம் என நினைத்தோம்.

அபர்ணாவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. மேடவாக்கம் அரசுப் பள்ளியில், இப்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில்,  1,074 மதிப்பெண் பெற்றிருக்கிறார். காமர்ஸ், அக்கவுன்டன்சி இரு பாடங்களிலும் முறையே 196,198 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

காமர்ஸ், அக்கவுன்டன்சி பாடப்பிரிவை எடுத்துப் படித்திருக்கும் அபர்ணாவிடம் உயிரியல், கம்ப்யூட்டர் சையின்ஸ் பாடப்பிரிவைத் தேர்வுசெய்யாததன் காரணம் குறித்துக் கேட்டோம்...

``ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினவங்க கொடுத்த பேட்டிகளை எல்லாம் படிச்சிருக்கேன். டாக்டர், இன்ஜினீயர், கலெக்டர் கனவெல்லாம் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, உண்மையாவே எல்லாம் வேற மாதிரி இருக்கிறதுபோல தோணுது. என் ஸ்கூல்லயே நிறைய பேருக்கு அப்படி லட்சியம் இருக்கு. வீட்டுலயும் டாக்டர் ஆவேன் இன்ஜினீயர் ஆவேன்னு சொல்லிவெச்சிருப்பாங்க. ஆனா, அவங்களுக்குள்ள இருக்கிற பயத்தையும் அழுத்தத்தையும் நான் உணர்ந்திருக்கேன். மனசு கொஞ்சம் சரியில்லைன்னாலோ, கொஞ்சம் பயந்தாலோ என்னால படிக்க முடியாது. காமர்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருந்தது. அதனால இந்த குரூப்பையே எடுத்துப் படிச்சேன். எதிர்பார்த்ததைவிட இந்த மார்க் கம்மிதான். ஆனா, நான் நினைச்சதைப் படிக்கிற அளவுக்கு மார்க் வாங்கியிருக்கேன். ஹேப்பி” என்கிறார். 

அரசுப் பள்ளி மாணவி அபர்ணா

``அரசுப் பள்ளிகளில் நிறைய மதிப்பெண் எடுக்க முடியாதுங்கிற மனோபாவம் பொதுவா இருக்கு. அரசுப் பள்ளியில படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கீங்க. சாதகமா எதை நினைக்கிறீங்க?''

``என்னைப் பொறுத்தவரை கவர்மென்ட் ஸ்கூல்தான் நிறைய இருக்கணும். எல்லாரும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிக்கணும். என் டீச்சர்ஸ்தான் என் மார்க்குக்குக் காரணம். ஸ்பெஷல் க்ளாஸ், மாடல் டெஸ்ட்டுனு நிறைய பயிற்சி கொடுத்தாங்க. எப்போ போன் பண்ணாலும் எடுத்து எங்க சந்தேகத்தை க்ளியர் பண்ற டீச்சர்ஸ், நான் படிச்ச அரசுப் பள்ளியில இருக்காங்க. பிரைவேட் ஸ்கூல்லதான் நல்லா படிக்க முடியும்னு சொல்றது எனக்கு வித்தியாசமாயிருக்கு. கவர்மென்ட் ஸ்கூல்ல நிறைய விளையாட்டுப் பொருள்கள் தரணும். பாத்ரூம் இன்னும் சுத்தமா வெச்சுக்கணும். இதுமட்டும்தான் சரிசெய்யணும். மற்றபடி கவர்மென்ட் ஸ்கூல்தான் எனக்குப் பிடிக்குது” என்றவரைப் பார்த்து, ``இது இவ்வளவு பேசும்னு எனக்கு இப்பதான் தெரியும்!” என்கிறார் அபர்ணாவின் அம்மா லதா, முகம் முழுக்கப் புன்னகையுடன்.

``அடுத்து என்ன படிக்கப்போறீங்க?''

முந்திக்கொண்டார் அபர்ணாவின் அப்பா நடராஜன். ``ஒரே பிள்ள எனக்கு. என் கண் பார்வையிலேயே வெச்சிக்கப்போறேன். ஆனா, நிறைய படிக்க வைக்கணும். அவ எவ்வளவு நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கவைக்கணும். நான் பெயின்ட் அடிச்ச, கட்டட வேலை செய்த வீட்டுல எல்லாம் ட்ரீட் கேட்குறாங்க. சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு இப்பதான் வர்றேன். ரெண்டு சூப்பர் காலேஜுல பி.காம் படிக்க அப்ளிகேஷன் போட்டாச்சு” என்கிறார்.

வாழ்த்துகள் அபர்ணா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்