வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (18/05/2018)

கடைசி தொடர்பு:23:30 (18/05/2018)

பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 75 வழக்குகள் பதிவு! எம்.பி-க்கள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெண்கள் அதிகாரம் வழங்குதலுக்கான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகப் பெண்கள் அதிகாரம் வழங்குதலுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சு


ராமேஸ்வரத்தில் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிஜோயா சக்கரவர்த்தி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் நடராஜன் 

``ராமநாதபுரம் மாவட்டம், நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதனடிப்படையில் ஏராளமான நலத்திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் படித்த பெண்களின் திருமணத்திற்கு விலையில்லா தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011- ம் ஆண்டு முதல் தற்போது வரை திருமண உதவித் தொகையாக ரூ.88.77 கோடியும், 101 கிலோ மதிப்புடைய தங்கமும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 210 கோடி மதிப்பிலான கடன் உதவியும், முத்ரா திட்டத்தின் கீழ் 282.38 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களின் மீது 72 வழக்குகளும், பாலியல் தொல்லையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 3 வழக்குகளும் பதியபட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற குழுவைச் சேர்ந்த அஞ்சுபாலா, ரேணுகா புட்டா, ரமாதேவி, ஜோதி துர்வே, பூனம்பென், ஜெயஸ்ரீ பென் பட்டேல், ரித்தி பதக், மாலா ராஜலெட்சுமி, வனரோஜா, காகசம் பெர்வின், ரீத்தா தராய் ஆகியோர் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.