வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (18/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (18/05/2018)

`இரண்டு நாள்களில் மணல் கொள்ளையர்கள் 30 பேர் கைது!’ - நெல்லை காவல்துறை அதிரடி

நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த இரு தினங்களில் மட்டும் 30 மணல் கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த இரு தினங்களில் மட்டும் 30 மணல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளையர் மீது எஸ்.பி நடவடிக்கை

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கடத்தல் அதிகமாக நடைபெற்று வந்தது. மணல் கொள்ளையர்களுடன் காவல்துறையினரும் சில இடங்களில் கூட்டணி அமைத்துச் செயல்படுவதாகப் புகார் வந்தது. நம்பியாற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுத்த செல்லப்பா என்பவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். அதே ஆற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுத்த விஜயநாராயணம் காவல்நிலைய முதல்நிலைக் காவலரான ஜெகதீஷ் துரை என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மணல் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மாவட்டம் முழுவதும் 3 வருடங்களுக்கும் அதிகமாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றிய 250 போலீஸார் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் மணல் கடத்தல் குறையத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் சில இடங்களில் மணல் கொள்ளையர்கள் துணிச்சலாகக் கடத்தலில் ஈடுபட்டனர். அவர்களை நெல்லை மாவட்ட போலீஸார் கைது செய்து வருகிறார்கள்.

இது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண் சக்திகுமார் கூறுகையில், ``நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மட்டும் அல்லாமல் மணல் விற்பனையாளர்கள், மணல் விற்பனை புரோக்கர்கள் எனப் பலரையும் கண்காணித்து வருகிறோம். கடந்த ஆண்டு மணல் கடத்தல் தொடர்பாக 14 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தோம். 

இந்த ஆண்டு இதுவரையிலும் 4 பேர் மணல் கடத்தல் தொடர்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சிலரது பெயர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்துள்ளோம். மணல் கடத்தலைத் தடுக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஷ் துரை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, பச்சையாறு உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த இரு தினங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.