அருங்காட்சியக தினத்தில் மாணவர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருள்களின் கண்காட்சி!

உலக அருங்காட்சியக தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழம்பெரும் பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உலகப் போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட வானொலி உள்ளிட்ட அரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

உலக அருங்காட்சியக தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழம்பெரும் பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உலகப் போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட வானொலி உள்ளிட்ட அரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழைமை வாய்ந்த பொருள்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பழங்கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை பொது மக்களும், இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தக் கண்காட்சியை நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தொடங்கி வைத்தார். மூன்று நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நாம் காணமுடியாத ஆயிரத்துக்கும் அதிகமான அரியவகைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன. முதலாம் உலகப்போர் நடந்தபோது, அது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் செய்திகளைக் கேட்கப் பயன்படுத்தப்பட்ட ரேடியோவை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர். 

அத்துடன், பழைமையான கடிகாரங்கள், டயனோசர் முட்டை, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள், பல நாடுகளின் அரியவகை தபால் தலைகள், பழங்கால நாணயங்கள் ஆகியவையும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அரங்கில் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்தக் கண்காட்சியைப் பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தும் வகையில் நூற்றாண்டுகளைக் கடந்த தட்டச்சு எந்திரம், அளவைகள், அரிக்கன் விளக்குகள். ஓலைச் சுவடிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

இதனைக் காணும் போது, பழங்கால மக்களின் வாழ்க்கைமுறை, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் எப்படி உருமாறி உள்ளன, தற்போது அறிவியல் எப்படி வளர்ந்துள்ளது, எதிர்காலத்தில் அறிவியல் எப்படி எல்லாம் உருமாற்றம் அடையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன போன்றவற்றை அறியும் வகையில் இருந்தது. ``இந்தக் கண்காட்சி மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் புதிய உந்துதல் ஏற்பட்டு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் மன நிலையை உருவாக்க வேண்டும். அதற்காகவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்’’ என அறிவியல் மையத்தின் அதிகாரியான முத்துக்குமார் தெரிவித்தார். இதனைப் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!