வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (19/05/2018)

கடைசி தொடர்பு:07:57 (19/05/2018)

தமிழகத்தில் முதன் முறையாக நடைபெற்ற `ஒரு தாள் தபால்தலை கண்காட்சி!'

தமிழகத்தில் முதல்முறையாக `ஓ எஸ் பெக்ஸ் - 2018' (OSPex-2018) என்ற தலைப்பில் ஒரு தாள் தபால் தலை கண்காட்சியானது (One Sheet Postal stamp Exhibition) திருச்சி தலைமை அஞ்சலகத்தில் உள்ள 'தபால் தலை சேகரிப்பு' அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

திருச்சி தபால் தலைகள் சேகரிப்போர் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தின் தபால் தலை சேகரிப்பு மையம் ஆதரவுடன் தமிழகத்தில் முதல்முறையாக  `ஓ எஸ் பெக்ஸ் - 2018' (OSPex-2018) என்ற தலைப்பில் ஒரு தாள் தபால் தலை கண்காட்சியானது (One Sheet Postal stamp Exhibition) திருச்சி தலைமை அஞ்சலகத்தில் உள்ள 'தபால் தலை சேகரிப்பு' அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மத்திய மண்டல தபால் துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

கண்காட்சி

அவர் பேசியதாவது, ``தபால் தலைகள் சேகரிக்கும் கலையானது பொழுதுபோக்கின் அரசனாகக் கருதப்படுகிறது. 1865-ம் ஆண்டு எம்.ஹெப்பின் என்ற பிரெஞ்சுக் காரர் தபால் தலைகள் சேகரிப்பை 'பிளாட்டலி' (Philately) என்றார். தபால் தலை வரலாற்றில் தொழில் நுட்பங்களும், தொழிற் வளர்ச்சியும் வளர்ந்தாலும் இக்கலை கலாசாரம், பண்பாடு, பாரம்பர்யத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அவ்வகையில் கண்காட்சியில் ஷேக்ஸ்பியர், மதுபாலா, யானை, சாரண இயக்கம், மீட்டர்மார்க்ஸ், பன்னாட்டு தபால் தலை பரிமாற்றச் சீட்டு, கிரிக்கெட், பாடும் பறவை, போப் மற்றும் புனிதர்கள், முதலை, பாம்புகள், யோகா, விமான அஞ்சல், சென்சார் முத்திரை, ராமாயணம் உட்பட பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டு 50க்கும் மேற்பட்ட தலைப்பில் தபால் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தியுள்ளனர்" என்றார்.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அஞ்சல்தலை சேகரிப்பு முறை குறித்த தகவல்கள், பயிற்சி, அஞ்சல் தலைகள் சேகரித்து வைப்பதன் அவசியம் மற்றும் அவற்றை காட்சிப்படுத்துவது போன்றவை குறித்து கற்பிக்கப்பட்டது. மேலும், அஞ்சலகத்தில்  கடிதம் எங்கெங்கெல்லாம் பயணப்படுகிறது என்பதையும், அஞ்சல் பெட்டிகளில் இருந்து கடிதங்களை எடுப்பது, அவற்றை உரியவர்களுக்கு விநியோகிப்பது ஆகியவை பற்றியும் விளக்கப்பட்டது. பணவிடை மூலம் பணம் அனுப்புவது மற்றும் அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட அஞ்சலகத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.  நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு கண்காட்சியில் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு சார்பில், தபால் துறை மூலமாக, 'தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தின் கீழ், 2018-19 கல்வியாண்டு முதல், அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளைச் சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில், தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு கோட்டத்துக்கும் சிறந்த 10 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40 மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் தபால் தலை கண்காட்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். இதில் ரகுபதி, மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார், கார்த்திகேயன் உட்பட பல தபால் தலை சேகரிப்பாளர்கள்  பங்கேற்றனர்.