நாகையில் தொடங்கியது கடற்கரை கோடை விழா..! | The beach summer ceremony begins at Nagai

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (19/05/2018)

கடைசி தொடர்பு:07:48 (19/05/2018)

நாகையில் தொடங்கியது கடற்கரை கோடை விழா..!

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கடற்கரை கோடை விழா தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கடற்கரை கோடை விழா வெகு சிறப்பாக தொடங்கியது.

கடற்கரை கோடை விழா

கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அரசின் சார்பில் கடற்கரை கோடை விழா கொண்டாடப்படுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காகவும், பாரம்பர்யக் கலைகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் நடத்தப்படும் இவ்விழா இன்று தொடங்கியது. இந்தக் கடற்கரை கோடை விழா மே 18, 19, 20 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவான இன்று (18.5.18) தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தமிழ் பாரம்பர்யக் கலைத் திருவிழா நடைபெற உள்ளது. 

நாளை (19.5.18) காவல் துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற உள்ளது.  நாளை மதியம் 6 மணியளவில் நகைச்சுவைப் பேச்சாளர் மோகன சுந்தரத்தின் நகைச்சுவை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 3 நாள்களிலும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு சார்பாகச் சிறியவர், பெரியவர்களுக்கான பல விதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.  மேலும், மாலை 5 மணியளவில் பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது,  மற்றும் சிலம்பாட்டம், பட்டம் விடும் நிகழ்ச்சி, மீன் வளத்துறை சார்பாகச் கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகியவையும் நடைபெற உள்ளன. 

குழந்தைகளுக்கு இலவச ரேக்ளா வண்டி சவாரியும், இரவில் வாணவேடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோடை விழா பற்றி நாகை மாவட்ட ஆட்சியர் கூறியபோது, ``இவ்வாண்டு நாகை கடற்கரை கோடை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்பு உணர்வு அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்" என்றார். தற்போதைய கோடை காலநிலையில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை கடற்கரை பகுதிகள் அதிகம் கவர்ந்துள்ளதால் இந்தக் கோடை விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.