வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (19/05/2018)

கடைசி தொடர்பு:07:39 (19/05/2018)

துறைமுகத்துக்கு எதிராகப் போராட்டம் - போராட்டக்காரர்களை தடுக்க 34 செக்போஸ்ட்..!

துறைமுகத்துக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அறிவித்துள்ள போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நாகர்கோவில் நகரைச் சுற்றி 34 செக்போஸ்ட்கள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகத்துக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அறிவித்துள்ள போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நாகர்கோவில் நகரைச் சுற்றி 34 செக்போஸ்ட்கள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்

கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கேட்டும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் போலீஸ் தடையை மீறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அறிவித்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து நிறுத்த நாகர்கோவில் நகரத்தைச் சுற்றி 34 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்தார். இதுகுறித்து குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வர்த்தக துறைமுகத்துக்கு எதிராக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதை மீறி ஆர்ப்பட்டத்துக்கு யாரும் வரவேண்டாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களில் வரக்கூடாது, மீறி வந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் விதமாக நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் மூன்று மாவட்ட எஸ்.பி-க்கள் கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 14 வாகனங்கள், 45 பைக்குகளில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைத் தடுக்க நாகர்கோவில் நகருக்கு வரும் சாலைகளில் 34 செக்போஸ்ட்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

இது ஒருபுறம் இருக்க 'குமரியி்ல் அமைதியை சீர்குலைக்க காவல் துறை திட்டமிடுகிறது.  எத்தனை தடைகள் விதித்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நாளைய போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும்' என தி.மு.க. குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன்  தெரிவித்துள்ளார். இதனால் குமரி மாவட்டம் பதற்ற நிலையிலேயே காணப்படுகிறது.