`ஸ்டாலினை மீறி இவர்கள் அரசியல் செய்வது கடினம்' - ரஜினி, கமலை எச்சரிக்கும் இந்தி நடிகர்!

அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மூத்த இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரபல இந்தி நடிகரும், பா.ஜ.க அதிருப்தி எம்.பியுமானவர் சத்ருகன் சின்ஹா. இவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்தவர். பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டதுடன் இதுவரை இரண்டு முறை கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக பா.ஜ.க. தலைமை மீது மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். யஷ்வந்த் சின்ஹாவுடன் இணைந்து பா.ஜ.க எதிர்ப்பை வெளிப்படையாகப் பேசி வருகிறார். இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த அவர்,  ``ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள் சினிமாவில் சாதனையாளர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களை அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது. ஏற்கெனவே தி.மு.க-வின் ஸ்டாலின் போன்ற வலுவான தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களை மீறி இருவரும் அரசியல் செய்வது கடினம். அரசியல் என்பது ரோஜாக்கள் படுக்கை அல்ல.

இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா

எனினும், தெளிவான திரைக்கதையோடுதான், அரசியல் களத்தில் குதித்திருப்பார்கள் என நம்புகிறேன். அரசியலில் வருவதற்கு முன்னர் அவர்கள் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் எனக் கூறியிருப்பேன். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் குறித்துப் பேசுகிறார். ஆன்மிக அரசியலால் கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களை மாற்றமுடியாது" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!