ஆதார் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை..! மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் போன்று தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆதார்

நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கமலேஷ்குமார் பாண்டே தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.  அதன்படி புதுச்சேரிக்கு வந்த அவர் கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி நலத்துறையை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் உட்பட 15 மாநிலங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள்துறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை, அந்தத் துறை சமூகநலத்துறையின் கீழ் இயங்குகிறது. அதைத் தனியாகப் பிரித்து செயல்படுத்தும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். இதுவரை 7 மாநிலங்களில் மட்டுமே இந்தத் துறைக்கென்று தனியாக ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களில் இந்தத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் துறைக்கு முழு நேர பொறுப்புடன் ஆணையர் பதவி வகித்தால்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும்.

அதேபோல ஆதார் அட்டை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கென தேசிய அளவிலான அடையாள அட்டை (யு.டி.ஐ.டி) வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அடையாள அட்டை விரைவில் நாடு முழுவதும் வழங்கப்பட இருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தனி சிறப்புப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.  சாதாரண பள்ளிகளிலேயே அந்த மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு சிறப்பு ஆசிரியர் பணியை உருவாக்க வேண்டும்.  புதுச்சேரியில் இயங்கிவரும்  440  பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்த அவரிடம் மாற்றுத்திறனாளிகள் தகுதிச் சான்று நாடு முழுவதும் அனைவருக்கும் தரப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, '2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2.6 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  அவர்களில் 50% பேருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்களை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!