நூற்றுக்கணக்கில் செத்து ஒதுங்கிய டால்பின்கள்... பியாஸ் நதியில் கலந்த சர்க்கரை ஆலைக் கழிவுகள்! | Large number of fishes found dead in Beas river

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (19/05/2018)

கடைசி தொடர்பு:11:27 (19/05/2018)

நூற்றுக்கணக்கில் செத்து ஒதுங்கிய டால்பின்கள்... பியாஸ் நதியில் கலந்த சர்க்கரை ஆலைக் கழிவுகள்!

பியாஸ் நதியில்தான் நன்னீரில் மட்டுமே வாழக்கூடிய டால்பின்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த டால்பின்கள் இந்தச் சம்பவத்தால் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

நூற்றுக்கணக்கில் செத்து ஒதுங்கிய டால்பின்கள்... பியாஸ் நதியில் கலந்த சர்க்கரை ஆலைக் கழிவுகள்!

கடந்த வாரம் வியாழக்கிழமை வரை பியாஸ் நதி (Beas river) அமைதியாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. எல்லையை ஒட்டிய அந்தக் கிராமத்தின் கரைகளில் பியாஸ் நதி அடர் சிவப்பு வண்ணத்துக்கு மாறியிருந்தது. வியாழக்கிழமை காலைவேளையில் நதியிலிருந்த அனைத்து உயிரினங்களும் கரைக்கு மிதந்து வரத் தொடங்கின. உயிரற்ற அந்த உடல்களை நதி வெளியேற்றுவது இயல்புதான். ஆனால், அந்த உயிரினங்கள் இறந்தது இயல்பானது அல்ல. எப்படி எனக் கேள்விகள் எழுந்தால், இந்திய நாட்டுக்கே உரியச் சாபமான ஆற்றின் அருகே அமைக்கப்படும் தொழிற்சாலைகளும் அவற்றின் கழிவுகளும்தான் பதில். ஒழுங்குமுறை இல்லாமல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அவற்றை கவனியாத அரசு என அதே பிரச்னை பஞ்சாபிலும் நிகழ்ந்திருக்கிறது. 

பஞ்சாபின் குர்தாஸ்பூர் (Gurdaspur) மாவட்டத்தில் உள்ள கிரி அஃப்கானா (Kiri Afgana) கிராமத்தில் அமைந்துள்ளது சாதா சர்க்கரை தொழில் நிறுவனம் (Chadha Sugar Industries Private Limited). பியாஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆலையிலிருந்து கடந்த வாரம் புதன்கிழமை மொலாசிஸ் (molasses) எனும் வெல்லப்பாகு கழிவாக வெளியேறத் தொடங்கியுள்ளது. ஒருநாளிலேயே நதியில் மொலாசிஸின் அளவு அதிகமாக அதன் விளைவாக வியாழக்கிழமை காலை உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. காலையில் தங்கள் தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் செல்லும் கிராம மக்கள் ஆற்றிலிருந்து இறந்த உயிரினங்கள் கரை ஒதுங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் இந்த நிகழ்வால் கொதிப்படைந்துள்ளது. குறிப்பாக அம்ரித்சர் (Amritsar), டர்ன் டர்ன்  (Tarn Taran), மற்றும் கபுதலா (Kapurthala) ஆகிய மாவட்டங்களின் ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மீன்களும், டால்பின்களும் இன்னும் பல உயிரினங்களும் இறந்து ஒதுங்கியுள்ளன. 

பியாஸ் நதி

இந்தச் சம்பவம் கேள்விப்பட்டதும் பியாஸ் ஆற்றங்கரைக்கு வந்த அரசு அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையைத் துவக்கியுள்ளனர். சம்பவம் குறித்து துணை ஆணையாளர் கமல்தீப் சிங் சங்கா கூறுகையில், ஆலையில் உள்ள மொலாசிஸ் தயாரிக்கும் கொதிகலன்களில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிப்பே இதற்குக் காரணம். இந்த வெடிப்பின் மூலம் வெளியேறிய மிகச்சூடான மொலாசிஸ் ஆற்றில் கலந்ததால் ஆக்ஸிஜென் அளவு குறைந்து உயிரினங்கள் இறந்துள்ளன. மேலும் நிபுணர்கள் ஆற்றின் பல்வேறு இடங்களிலும் நீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். ஆய்வுக்குப் பின் முழு விவரங்கள் தெரிய வரும் என்கிறார். மொலாசிஸ் எனப்படும் வெல்லப்பாகுவானது மிகவும் பிசுபிசுப்பான திரவம். இதன் அடர்த்தி நீரின் சமநிலையைப் பாதித்திருக்கலாம். பஞ்சாபின் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். இதற்குக் காரணமான சர்க்கரை ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். ஆற்று நீரைத் தூய்மையாக்குவதற்கான வழிகளையும் முன்னெடுக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆதியில் இருந்து இப்போது வரை இந்திய வரலாற்றில் முக்கிய நதியான சிந்துநதியின் ஒரு கிளை நதிதான் இந்த பியாஸ் நதி. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் என இரு மாநிலங்களில் 470 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது பியாஸ் நதி. இதன் வடிகால் நிலப்பரப்பு ஏறக்குறைய 20,303 சதுர கிலோமீட்டர். இந்த நதியில்தான் நன்னீரில் மட்டுமே வாழக்கூடிய டால்பின்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த டால்பின்கள் இந்தச் சம்பவத்தால் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடந்த புதன்கிழமை மதியத்தில் இருந்து அடுத்த நாள் வியாழக்கிழமை காலைக்குள் 10,000 கிலோ லிட்டர் மொலாசிஸ் பியாஸ் நதியில் கலந்துள்ளன. பியாஸ் நதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில்தான் அந்தச் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. புதன்கிழமை வெடிப்பு ஏற்பட்ட போதிலும் அதனைச் சரி செய்யாமல் தொடர்ந்து ஆற்றில் கலக்க விட்டிருக்கின்றனர் ஆலை நிர்வாகத்தினர். பியாஸ் நதியின் 40 கிமீ தூரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 110 கிமீ தொலைவில் இருக்கும் ஹரிகே ஏரியிலும் அதனை ஒட்டிய ஈரநிலங்களிலும் இதன் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மொலாசிஸ் கழிவுகள் அதற்குள் அவ்வளவு தூரம் பயணித்து விட்டன. 

பியாஸ் நதியும் இறந்த மீன்களும்

பியாஸ் ஆற்றின் நீரைத் தூய்மைப்படுத்துவதற்காக போங் (Pong) மற்றும் ரஞ்சித் சாகர் (Ranjit Sagar) எனும் இரு அணைகளிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொலாசிஸின் அடர்த்தியைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர். துணை ஆணையாளர் கமல்தீப் சிங் கூட, முன்பைவிட அணைகளிலிருந்து நீர் திறந்த பின் ஆற்றின் மாசு குறைந்து வருகிறது. மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஆற்று நீரில் நச்சுகள் கலந்ததாகத் தெரியவில்லை என்கிறார். இது ஒருபுறம் இருக்க இந்தச் சம்பவத்துக்கு காரணமாக மற்றொரு பார்வை முன்வைக்கப்படுகிறது. சாதா சர்க்கரை தொழில் நிறுவனமானது அதன் கொள்ளளவைவிட அதிகமான மொலாசிஸை உற்பத்தி செய்து தேக்கி வைக்கிறது. தேவைக்கு அதிகமான மொலாசிஸை வைத்து மது தயாரிக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த அதிகப்படியான மொலாசிஸ்தான் ஆற்றில் கலந்துள்ளது. 

தியோடர் பாஸ்கரன் இதுகுறித்து இன்னும் அதிக தெளிவுகளைப் பெற சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களிடம் பேசியபோது, "மொலாசிஸ் ஆற்றில் கலப்பதனால் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தில் மொலாசிஸுடன் நச்சு வேதிப்பொருள்கள் கலந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நன்னீர் டால்பின்கள் அதிகளவில் இறந்திருக்கின்றன. இப்பிரச்னை மிக முக்கியமானது. பஞ்சாபில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பல்வேறு சர்க்கரை ஆலைகள் ஆற்றுக்கு அருகில்தான் உள்ளன. இன்னும் பல தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கொட்டுகின்றன. சுத்திகரிப்பு எனும் விஷயங்கள் இருந்தாலும் அவை செயல்படுவதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. அப்படித்தான் பவானி ஆற்றங்கரையில் ஷேஷாயி பேப்பர் ஆலை, திருப்பூர் சாயத் தொழிற்சாலை, ஆம்பூர் தோல் கழிவுகள் இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இதுபற்றிய விழிப்பு உணர்வு எல்லோரிடமும் ஏற்பட வேண்டும்" என்றார். 

உலகில் தோன்றிய பல்வேறு சமவெளி நாகரீகங்கள் ஆற்றங்கரையில்தான் தோன்றின. மனித வரலாற்றில் ஆறுகளுக்கான இடம் என்பது மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே பஞ்சாபின் நிலத்தடி நீரும் சில சிறிய ஆறுகளும் ரசாயன கலப்பினால் பல்வேறு உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறன. கேன்சர் எக்ஸ்பிரஸ் இயக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னையின் வீரியம் உள்ளது. எஞ்சி இருக்கும் நதிகளையும் அதன் உயிரினங்களையும் காப்பது நமது கடமைதான். நதிகளின் அமைதி அவற்றுக்கே உரித்தான தனிக்குணம். ஆனால், அவற்றை அமைதியாய் இருக்க விடாமல் செய்வது மனிதர்களின் நற்குணம் என்றே சொல்லலாம். நதிகளின் அமைதியையும் அதன் வளத்தையும் குத்திக் கிழிக்காமல் இருப்போம் இனியாவது...


டிரெண்டிங் @ விகடன்