வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (19/05/2018)

கடைசி தொடர்பு:11:50 (19/05/2018)

`நான்தான் கல்கியின் அவதாரம்’ - பதறவைத்த குஜராத் அரசு அதிகாரி

நான்தான் கல்கி அவதாரம் என்றும் என்னால் பணிக்கு வர இயலாது எனவும் குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான்தான் கல்கி அவதாரம் என்றும் என்னால் பணிக்கு வர இயலாது எனவும் குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கல்கி

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின்படி விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமாகும். கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவற்றையும் அழிப்பார் என்று பலராலும் நம்பப்படுகிறது. 

இது இப்படி இருக்க குஜராத் மாநிலத்தின், அகமதாபாத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெயர். இவர் கடந்த 8 மாதங்களில் 16 நாள்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு அரசு அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

அதற்கு விளக்கமளித்த ரமேஷ் சந்திரா, 'நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி. இதை நான் 2010-ம் ஆண்டு அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது உணர்ந்தேன். அதிலிருந்து எனக்கு நிறைய தெய்வ சக்திகள் கிடைத்துள்ளன. பிறகு, நான் உலக நன்மைக்காக ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து தவமிருக்க முயற்சி செய்து வருகிறேன். இதை அலுவலகத்திலிருந்து என்னால் செய்ய முடியாது என்பதால்தான் இங்கு வராமல் வீட்டில் இருந்தே என் தவத்தை மேற்கொண்டு வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். மேலும், தன் தவத்தினால்தான் கடந்த 10 வருடங்களாக நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. நான் அலுவலகத்தில் அமர்ந்து பொழுது போக்க வேண்டுமா அல்லது நாட்டை வறட்சியிலிருந்து மீட்க வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். 

ரமேஷ் சந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பி மூன்று நாள்கள் ஆகின்றன. அதிகாரிகளிடம் அவர் கூறிய பதில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.