வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (19/05/2018)

கடைசி தொடர்பு:12:30 (19/05/2018)

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு தமிழர் அமைப்புகள் தீபம் ஏற்றி அஞ்சலி..!

 இலங்கை முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது உயிரிழந்த தமிழர்கள் நினைவாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரின்போது உயிரிழந்த தமிழர்கள் நினைவாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையே இறுதிக்கட்ட போர் உக்கிரமாக நடந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த அந்தப் போரின்போது ராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தினர் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பதற்காகப் பாதுகாப்பு வளைய பகுதியை நாடி வந்த லட்ச கணக்கான தமிழர்கள் இரக்கமின்றி கொத்து குண்டுகளால் கொன்றழிக்கப்பட்டனர். இறுதியாக முல்லைத்தீவு அருகே  உள்ள நந்திகடல் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததாகக் கூறிய இலங்கை ராணுவம் பிரபாகரனின் தோற்றம் கொண்ட போட்டோ ஒன்றையும் வெளியிட்டது. இதனிடையே ராணுவ தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் தங்கள் ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க செய்வதாக விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்தது.

முள்ளிவாய்க்கால் போரின் நினைவாக அஞ்சலி

இதையடுத்து கடந்த 9 ஆண்டுகளாக இறுதிக்கட்டப்போரில் பலியான தமிழர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு தினம் கடைப்பிடித்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்று மாலை ஒன்றுகூடிய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளில் தீபம் ஏற்றி போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், தங்கள் செல்போன்களில் உள்ள விளக்குகளை எரியவிட்டு முழக்கமிட்டனர். 

தமிழர் நலம் பேரியக்கத்தினர் ஒருங்கிணைத்து இருந்த இந்நிகழ்ச்சியில் அதன் தலைவரும் இயக்குநருமான களஞ்சியம், திருமுருகன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி தலைவர் எஸ்.ஆர்.தேவர், ம.தி.மு.க செயலாளர் பாஸ்கரன், தீவு மாணவர் கூட்டமைப்பு சதீஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று உரையாற்றினர்.