வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (19/05/2018)

கடைசி தொடர்பு:13:15 (19/05/2018)

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் `நாசா’ - சுதாரித்துக்கொள்ளுமா தமிழக அரசு?

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது என ஆய்வறிக்கை தகவலை வெளியிட்டுள்ளது நாசா. 

கோப்புப்படம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பூமியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியிருந்தது. அந்தச் செயற்கைகோள் மூலம் உலக நாடுகளின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து 14 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன், முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் விரைவாகக் குறைந்து வருகிறது என்று செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவலை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

வட இந்திய மாநிலங்களைப்போல் தென் இந்திய மாநிலங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு  குறைவுதான். இதேபோன்று, தமிழகத்தின் ராமநாதபுரம், தஞ்சாவூர், கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. நாசா வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்கிறது என்று தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு மையம் அதிகாரியிடம் கேட்டோம். 

அவர் கூறுகையில், 'ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. வேளாண்மை உற்பத்தி பயன்பாட்டுக்காக விவசாயிகள் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்த பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதேபோல், அரசிடம் முறையாக அனுமதி பெற்று, வணிக ரீதியாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் தொகையை மீண்டும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கச் செய்வதற்கான நீர் மேலாண்மை திட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான வரைவு அறிக்கையை அரசு தயாரிக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல், முறையாக அனுமதி பெறாமல், மறைமுகமாக நிலத்தடி நீரை எடுத்து வரும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும். மேலும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தற்போது எந்த நிலையில் செயல்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்து வருகிறோம்'' என்றார். 

நாசா வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, பூமியில் ஈரப்பதம் மிகுந்த இடங்கள் மேலும் ஈரமாகவும் உலர்ந்த நிலப்பரப்பு பகுதிகள் மேலும் உலர்ந்து காணப்படுகிறது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றங்கள் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கோதுமை மற்றும் நெற்பயிர் சாகுபடிக்காக அதிகளவில் உறிஞ்சப்படுவதும் நிலத்தடி நீர் குறைவுக்கான காரணம் எனவும் அறியப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள், கலிஃபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.