பருப்பு இறக்குமதி 10 லட்சம் டன் சரிவு; அரசுக்கு ரூ.9,775 கோடி சேமிப்பு

கடந்த 2017-18 ம் நிதியாண்டில் பருப்பு இறக்குமதி 10 லட்சம் டன் சரிவடைந்துள்ளது. இதனால், அரசுக்கு அன்னிய செலவாணியில் ரூ.9,775 கோடிக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பருவமழை நன்றாக இருந்தது, பருப்புக்கு சிறப்பான ஆதரவு விலை ஆகியவற்றால் இதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பருப்பு இறக்குமதி குறைந்துள்ளது. இந்தியா பருப்பு உற்பத்தி, பயன்பாடு, நுகர்வு ஆகிய மூன்றிலும் முதல் இடத்தில் உள்ளது.  நம் நாட்டின் மொத்த பருப்பு பயன்பாடு ஆண்டுக்கு 2.40  கோடி டன்னாக உள்ளது. இதைப் பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் மத்திய அரசு 40-60 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மத்தியில் சில்லறைச்  சந்தையில் 1 கிலோ பருப்பு ரூ.200யை எட்டியது. இதைத்தொடர்ந்து, பருப்பு உற்பத்தியில் தன்னிறவு எட்ட, அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், இதற்கான ஆதரவு விலையையும் உயர்த்தியது.

பருப்பு

2017-18 ம் ஆண்டு பருவ காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரையில் 2.31 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சாதனை ஒரு அளவாகும். பருவமழை சிறப்பாக இருந்தது, மத்திய அரசு பருப்புக்கான ஆதார விலை அதிகரித்தது ஆகியவற்றினால் இந்த சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பின் அளவு 10 லட்சம் டன் குறைந்துள்ளது. இதனால், நாட்டின் அன்னியச் செலாவணியில் ரூ.9,775 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பருப்பு இறக்குமதி 10 லட்சம் டன் குறைந்து 56.50 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது 2016-17-ம் நிதியாண்டில் 66 லட்சம் டன்னாக இருந்தது.

நாட்டின் பருப்பு உற்பத்தி சிறப்பாக உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு  இதன்  இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பருப்பு இறக்குமதி மீது இறக்குமதி தீர்வை விதிக்கப்பட்டுள்ளது. கொண்டைக் கடலை மீது 60 சதவிகித இறக்குமதி தீர்வையும், பட்டாணி மீது 50 சதவிகித இறக்குமதி தீர்வையும், பயறு மீது 30 சதவிகித இறக்குமதி தீர்வையும், துவரம் பருப்பு மீது 10 சதவிகித இறக்குமதி தீர்வையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க அரசு  துவரம் பருப்பு, உளுந்து, பயறு ஆகியவற்றை ஆண்டுக்கு 2 லட்சம் டன்  மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஜூன் மாதம் வரையில் 1 லட்சம் டன் பட்டாணி மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 22-ம் தேதியிலிருந்து அனைத்து வகையான பருப்புகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொண்டைக்கடலை ஏற்றுமதிக்கு 7 சதவிகித ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இதைத் தவிர்த்து, சமையல் எண்ணெய் மற்றும் கோதுமை ஆகியவற்றின் இறக்குமதியையும் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 10.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!