திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்..!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா இன்று துவங்கியது. இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. 

trichendur subramaniya swamy temple

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக இன்று (19.05.18) துவங்கியது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இதை முன்னிட்டு, இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தை அடைகிறார்.

மாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பிறகு 11 முறை வசந்த மண்டபத்தை வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்து கோயிலை அடைகிறார். 10 நாள்களும் தினமும் உச்சிக்கால பூஜைக்குப் பின் சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளலும், பூஜைகளுக்குப் பின்னர், தங்கத்தேரில் எழுந்தருளி திருக்கோயிலை அடைவதும் நடைபெறுகிறது.

இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி, வைகாசி விசாகத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும்  2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும்  மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

மாலை 6.30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துக்குப் பிறகு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகாதீபாராதனையைத் தொடர்ந்து  சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பிகைகளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து திருக்கோயிலை அடைவதுடன் வைகாசி வசந்தம் மற்றும் விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜைக் காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!