வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (19/05/2018)

கடைசி தொடர்பு:16:00 (19/05/2018)

ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் மாவட்டத் தலைவர்களுக்கிடையே மோதல்..!

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் மாவட்ட முன்னாள், இந்நாள் தலைவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் மாவட்ட முன்னாள், இந்நாள் தலைவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் திருநாவுக்கரசர்.

ராமநாதபுரம் பரக்கத் திருமண மகாலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உரையாற்றுகையில், 'தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் சில ஜாதி, மதம் சார்ந்தவையாக இருக்கின்றன. சில ஏதேனும் ஒரு தொகுதிக்குள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் ஜாதி, மதம் பாராது இந்தியா முழுவதும் இருக்கிற கட்சியாக இருந்து வருகிறது. அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒரு காலத்தில்தான் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க-வோ ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2 மற்றும் 3 அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ், திவாகரன் ஆகியோருக்கு எந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனத் தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். 

ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குள்ள தலைவர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில்தான் கட்சியை நடத்தி வருகின்றனர். எனவே 2 வது அணி, 3 வது அணி அமைக்கப்போகிறோம் என்பதெல்லாம் வரப்போவது இல்லை. எனவே, எந்தக் கட்சியாக இருந்தாலும் மோடியை வீழத்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்துதான் ஆக வேண்டும். பா.ஜ.கட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமேயாகும். மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராகவும் ராகுல்காந்தி இருக்கிறார். எனவே, மோடியை வீழ்த்த ராகுல் காந்தியால்தான் முடியும். அவருக்குதான் அதற்கான தகுதிகளும் இருக்கின்றன. கமலும் ரஜினியும் கட்சி ஆரம்பித்தால் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்த நடிகராக இருந்தாலும் கட்சி தொடங்கினால் உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட முடியாது. அப்படித் தொடங்கினால் முதலில் ஆட்சிக்கு வந்தால்தான் தொடர்ந்து அரசியலில் வெற்றி பெற முடியும். இதற்கு எம்.ஜி.ஆரும் என்.டி.ராமாராவும் நல்ல உதாரணம். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதை வைத்து அரசியலில் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று ஜோதிடம்தான் சொல்ல முடியும்'' என்றார். 

முன்னதாக, கூட்டத்தில் கட்சியின்,  மாவட்ட முன்னாள் தலைவர் குட்லக் ராஜேந்திரன் பேசும்போது, `நான் சொல்லித்தான் தற்போது மாவட்டத் தலைவராகத் தெய்வேந்திரன் இருக்கிறார். என்மீது பொய் வழக்குப் போடப்பட்டு அதிலிருந்து விடுதலையாகிவிட்டேன்' என்று பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை ஆதரித்து கோஷமிட்டனர். பலரும் விசில் அடித்ததால் கோபமடைந்த மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் திடீரென எழுந்து குட்லக் ராஜேந்திரனை இடைமறித்து, ''என்னைப் பற்றிப் பேசக் கூடாது'' என்று குரல் கொடுத்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் கூச்சல் குழப்பத்துடன் சிறிது நேரம் பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாகத் திருநாவுக்கரசர் எழுந்து தெய்வேந்திரனை சமாதானப்படுத்தி உட்கார வைத்தார்.