கதிராமங்கலத்தை அச்சுறுத்தும் பாரத்மாலா திட்டம்..! போராடத் தயாராகும் பொதுமக்கள் | Kathiramangalam people afraid for Bharath mala plan

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (19/05/2018)

கதிராமங்கலத்தை அச்சுறுத்தும் பாரத்மாலா திட்டம்..! போராடத் தயாராகும் பொதுமக்கள்

தங்களது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த கதிராமங்கலம் மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்கிறது. தங்களை பெரும் துயரங்களில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் பெட்ரோல்-கேஸ் கிணறுகளை மூட வேண்டும் என்ற இம்மக்களின் அபயக் குரல்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இன்றுவரை கொஞ்சம்கூட செவி சாய்க்கவில்லை. இந்நிலையில்தான் அடுத்த அபாயமாகப் பாரத்மாலா என்ற சாலைவழித் திட்டம் இப்பகுதி மக்களை மேலும் நிம்மதி இழக்க செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராட்சத கிணறுகள் அமைத்து பெட்ரோல்-கேஸ் எடுத்து வருகிறது மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம். இதனால் நிலத்தடிநீர் அதிக ஆழ்த்துக்குச் சென்றதோடு ரசாயனத்தன்மை கலந்து, சுகாதாரமற்ற நீராகவும் மாறிவிட்டது. இதனால் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் பெரும் துயரத்தில் தவிப்பதாக இப்பகுதியில் உள்ள மக்கள் ஆதங்கத்துடன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே விவசாய நிலங்களின் வழியே செல்லக்கூடிய பெட்ரோல்- கேஸ் கிணறுகளில் அடிக்கடி ஏற்படும் கசிவால், விவசாயம் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

இந்நிலையின்தான் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, கதிராமங்கலம் கடைத்தெருவில் உள்ள பெட்ரோ-கேஸ் கிணற்றில் விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதை இப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். நூற்றுகணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் இங்கிருந்து வெளியேற வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதி இப்பகுதி மக்கள் ஒன்றாகக் கூடி இங்குள்ள அய்யனார் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால், மத்திய மாநில அரசுகள் இன்றுவரையிலும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இன்று 365வது நாளாகப் போரட்டம் தொடர்கிறது. இதற்கிடையே பாரத்மாலா சாலை வழித்திட்டம் என்ற பெயரில் கும்பகோணம்-கதிராமங்கலம்-சீர்காழி-சிதம்பரம் வழியாகப் பரங்கிப்பேட்டை வரையில் சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காகக் கதிராமங்கலத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இப்பகுதி மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஓ.என்.ஜி.சி-க்கு எதிரான காத்திருப்புப் போராட்டம் இன்று ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில் பாரத்மாலா திட்டத்துக்கு எதிராகவும் போராட்டத்தைத் தொடங்க இப்பகுதி மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பெட்ரோல் - கேஸ் எடுக்கும் பணிகளுக்கும் பாரத்மாலா வழித் திட்டத்துக்கும் தொடர்பு இருப்பதாக இப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள்.