வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (19/05/2018)

கடைசி தொடர்பு:16:21 (19/05/2018)

ப்ளஸ் டூ தேர்வில் கிடுக்கிப்பிடி... மதிப்பெண் குறைவு... சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குச் சாதகமா?

ப்ளஸ் டூ தேர்வில் கிடுக்கிப்பிடி... மதிப்பெண் குறைவு... சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குச் சாதகமா?

வ்வோர் ஆண்டும் `ப்ளஸ் டூ தேர்வில், எங்கள் பள்ளி இயற்பியல், வேதியியல், உயிரியல் என மூன்று பாடங்களிலும் 200-க்கும் 200 மதிப்பெண் பெற்றவர்கள் இவ்வளவு பேர்' எனத் தனியார் பள்ளிகள் தொடர் விளம்பரம் செய்துவந்தன. இந்த ஆண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தேர்வுத்துறை. ஆனால், `மதிப்பெண் குறைப்பு, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குச் சாதகமாகும்' என்ற தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ப்ளஸ் டூ

ப்ளஸ் டூ தேர்வு முடிவை வெளியிட்ட பிறகு மதிப்பெண் குறைந்திருப்பது பற்றிப் பேசினார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ``எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், ப்ளஸ் டூ தேர்வில் கேள்விகள் கடினமாகக் கேட்கப்பட்டன" என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ``தேர்வுத்துறையின் பன்னிரண்டாம் வகுப்புக்கான மதிப்பெண் குறைவு முடிவு, தமிழக மாணவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது'' என்கிறார்  கல்வியாளர் நெடுஞ்செழியன். 

பொதுத்தேர்வு பிளஸ் டூஇவர், ``இந்த ஆண்டு பாடங்களில் ஒட்டுமொத்தமாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும், 1,100-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இதனால், பொறியியல் மாணவர் சேர்க்கையில் தமிழக - சி.பி.எஸ்.இ மாணவர்களிடையே கடும்போட்டி நிலவும். நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண் குறைத்திருப்பது பொறியியல் படிப்பிலும் அவர்களே அதிகளவில் சேர வாய்ப்புள்ளது. இதனால், தமிழகப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

ஆயிரம் மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் 10 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே. ஆனால், 800 மதிப்பெண்ணுக்குக் குறைவான மதிப்பெண் பெற்று 75 சதவிகிதம் பேர் அதிகமாக உள்ளனர். இது, தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக மாறும். ஒரே நேரத்தில் ஆன்லைன் கவுன்சலிங், மதிப்பெண் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்குச் சாதகமாக இல்லை" என்றார்.

 ப்ளஸ் டூ

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``உயிரியல் பாடத்தில் மாணவர்கள் சிந்தித்து எழுதும்வகையில் கேள்வித்தாளை வடிவமைத்ததால்தான், மாணவர்கள் மூன்று கேள்விகளுக்குச் சரியான முறையில் விடையளிக்கவில்லை. இதனால் உயிரியல் பாடத்தில் யாரும் 200-க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டு 221 பேர் உயிரியல் பாடத்திலும், 187 பேர் இயற்பியல் பாடத்திலும், 1,123 பேர் வேதியியல் பாடத்திலும், 3,656 கணிதப் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 231 மாணவர்களே 1,180 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு அறிவியல் பிரிவிலிருந்து 47 பேர் மட்டுமே 1,180 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றுள்ளனர்" என்றனர். 

தனியார் பள்ளியின் நிர்வாகி சுவாமிநாதன், ``இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வுக்கு முழு அளவில் தயாரானதால், உயிரியல் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால்தான் உயிரியல் பாடத்தில் சராசரி மதிப்பெண் குறைந்திருக்கிறது. மாணவர்கள் 90 சதவிகித மதிப்பெண்ணுக்குமேல் ஒவ்வொரு மதிப்பெண்ணைப் பெறவும் கடுமையாக முயன்றிருப்பது நல்ல விஷயமே" என்றவர், ``1,090 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றவர்கள் நிறையப் பேர். இதனால் பொறியியல் கலந்தாய்வில் தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிறந்த கல்லூரியில் சேர வாய்ப்பு இருக்கிறது" என்றார். 

பிளஸ் டூகல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, ``இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண் 5 முதல் 8 மதிப்பெண் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ தேர்வும் கடினமாகவே கேட்கப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

ப்ளஸ் டூ தேர்வில் 800 மதிப்பெண்ணுக்குக் குறைவாக நிறைய மதிப்பெண் பெற்றிருப்பவர்கள், பொறியியல் படிக்கலாமா அல்லது அறிவியல் பட்டப்படிப்பில் சேரலாமா என்பதுகுறித்து குழப்பமான மனநிலையில் இருக்கின்றனர். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார். 

மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி பொறியியல் கலந்தாய்வில் எந்தவிதத்திலும் பாதிப்படையாமல்  பாதுகாக்கவேண்டியது  தமிழக அரசின் கடமை.


டிரெண்டிங் @ விகடன்