வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (19/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (19/05/2018)

`ஹைட்ரோ கார்பன் திட்டம் புதிய அவதாரம் எடுக்குமா?' - குழப்பத்தில் நெடுவாசல் மக்கள்

ஒரு வருடம் வரை காத்திருந்ததால் பல வகைகளிலும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நெடுவாசல் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளோம். இதற்கு மாற்றாக வேறு இடம் வழங்க வேண்டும் எனப் பெட்ரோலிய துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்கிறது ஜெம்.

`ஹைட்ரோ கார்பன் திட்டம் புதிய அவதாரம் எடுக்குமா?' - குழப்பத்தில் நெடுவாசல் மக்கள்

நெடுவாசல் மக்கள் தற்போது நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்பிருக்கிறார்கள். ஆனால், இது எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்ற சந்தேகம் அவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டேதான் இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு அமைதியும் மகிழ்ச்சியும் விரவிக் கிடந்த பூமி இது. ஹைட்ரோ கார்பன் என்ற சொற்கள் இங்கு ஒலிக்கத் தொடங்கியதிலிருந்து போராட்ட பூமியாக வீறுகொண்டு எழுந்தது நெடுவாசல்.

 ஹைட்ரோ கார்பன்

இரவு பகல் பாராமல், சுட்டெரிக்கும் வெயிலில் கொட்டும் மழையில், கடும் பனியில் தவம் போல் காத்திருப்பு போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் இப்பகுதி மக்கள். இதற்கு கிடைத்த பெரும் பலனாகத்தான் தனியார் நிறுவனமான ஜெம் லேபரேட்டரிஸ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. ஆனால் இது நிரந்தரமான வெற்றியா என்ற கேள்விக்குறி இவர்களின் மனதில் முள்ளாய் தைத்துக் கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் நெடுவாசல் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த ஜெம் நிறுவனத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசு இதுவரையிலும் வாய் திறக்கவே இல்லை.. இது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை மத்திய மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் இப்பகுதி மக்கள். 

மிகவும் செழிப்பான விவசாயப் பூமியான நெடுவாசல், நல்லண்டார் கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செய்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெம் நிறுவனம் தீவிரமாக இறங்கியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். விவசாயம் முற்றிலுமாக அழிந்துப் போகும் என எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் போராட்டங்களில் இறங்கினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இரவு-பகலாக பல மாதங்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இப்பிரச்னை இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ஜெம் நிறுவனம் இத்திட்டம் தொடர்பாக எந்த ஒரு பணியையுமே மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து வந்தது.

நெடுவாசல்  ஹைட்ரோ கார்பன்

இந்நிலையில் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹரிபிரசாத் ‘நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலத்தை எங்களது நிறுவனத்திற்கு பெயருக்கு மாற்றி தரக் கோரி மத்திய மாநில அரசுகளுக்கு பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. ஒரு வருடம் வரை காத்திருந்ததால் பல வகைகளிலும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நெடுவாசல் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். இதற்கு மாற்றாக வேறு இடம் வழங்க வேண்டும் என பெட்ரோலிய துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்.” என்றார்.

ஜெம் நிறுவனம் நிரந்தரமாக வெளியேறிவிட்டதா? மக்களின் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி மூலமாக இது செயல்படுத்தப்படுமா? நெடுவாசலுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் வேறு எங்கு இதனை செயல்படுத்தப் போகிறார்கள்? நெடுவாசலில் போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை தமிழக அரசு எப்பொழுது வாபஸ் வாங்கும் என இப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தி வரக் கூடிய மீத்தேன் திட்ட திருவிளையாடலோடும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஒப்ந்தத்தின் படி உரிய காலத்தில் மீத்தேன் எடுக்கும் பணிகளை தொடங்காததால், தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு அளித்திருந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனமும் இதே கருத்தை வெளியிட்டது. ஆனால் இந்தத் தகவல் பெட்ரோலியத்துறையின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகவே இல்லை. அரசிதழிலும் வெளியாகவில்லை. இதற்கிடையே மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்காக தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்ப கடிதம் அனுப்பிய தகவல் வெளியானது. இதே நிலை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திலும் உருவாகலாம் என சந்தேகிக்கிறார்கள் நெடுவாசல் மக்கள். மத்திய மாநில அரசுகள் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்கின்றது.  


டிரெண்டிங் @ விகடன்