வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (19/05/2018)

கடைசி தொடர்பு:17:29 (19/05/2018)

`எடியூரப்பா ராஜினாமா!’ - கர்நாடக அரசியலில் அடுத்தது என்ன?

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பா.ஜ.க-வின் எடியூரப்பா அறிவித்தார். 
 

எடியூரப்பா


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வுக்கு, பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கர்நாடகாவின் 23 வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகப் பேரவையில் உருக்கமாகப் பேசிய எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். 

இந்த நிலையில், ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியினர் ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என்று தெரிகிறது. அந்தக் கட்சிகளிடையே ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்பார். அதேபோல, இரு கட்சிகளிலிருந்தும் தலா 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல, துணை முதலமைச்சர் பதவிகுறித்து அந்தக் கட்சிகள் இதுவரை முடிவுசெய்யவில்லை. அதே நேரம், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் உரிமை ஆளுநருக்கு இருக்கிறது. 

எடியூரப்பா ராஜினாமாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், ``இதன்மூலம் சட்டம், ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக அரசியல் விவகாரத்தை நீதித்துறை சிறப்பாகக் கையாண்டது. எடியூரப்பா பதவி விலகியுள்ளதால், காங்கிரஸ் - ம.ஜ.த சார்பில் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்பார்’ என்று தெரிவித்தார். எடியூரப்பா பதவி விலகியது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.