சிந்தியாவுக்குப் பதில் டிப்ளோமா பட்டம் பெற்ற `ரோபோ'! - ‘வாவ்’ ஆச்சர்யம்  

அமெரிக்காவின் அலபாமா பள்ளி பட்டமளிப்பு விழாவில், மாணவிக்குப் பதிலாக ஒரு ரோபோ டிப்ளோமா பட்டம் பெற்றுக்கொண்டது. 

ரோபோ

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள லிபுளோர் பள்ளியில் சிந்தியா பெட்வே என்ற மாணவி படித்து வருகிறார். அண்மையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பள்ளியில் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கலந்துகொள்ள வேண்டும் என்று சிந்தியா ஆர்வமாக இருந்திருக்கிறார். இதனால், சிந்தியா பெட்வேவின் பட்டத்தை யாரிடம் கொடுப்பது என்று பள்ளி நிர்வாகம் ஆலோசித்தது. 

இதையடுத்து, புதிய முயற்சியாகச் சிந்தியா சார்பில், புரோகிராம் செய்யப்பட்ட ரோபோவிடம் அந்தப் பட்டத்தைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட்டன. இதற்கு, சிந்தியாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். திட்டப்படி பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. 

சிந்தியாவுடன் படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் விழாவுக்குரிய அங்கி, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து பட்டம் பெறத் தயாராக இருந்தனர். சிந்தியாவுக்குப் பதிலாக தயாரிக்கப்பட்ட ரோபோவும் அங்கி தொப்பி ஆகியவற்றை அணிந்தபடி சிந்தியாவின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தது. மாணவிகளின் பெயரை தெரிவித்தவுடன் அவர்கள் சென்று பட்டங்களைப் பெற்றனர். சிந்தியாவின் பெயர் வாசிக்கப்பட்டதும் அவருக்குப் பதிலாக அந்த ரோபோ மேடைக்குச் சென்று டிப்ளமோ பட்டம் பெற்றது. ரோபோ பட்டம் பெறும் காட்சியை சிந்தியா மற்றும் அவரின் பெற்றோர்கள் மருத்துவமனையில் இருந்தவாறு நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டு ரசித்தனர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!