வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (19/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (19/05/2018)

`பணிப் பாதுகாப்பு வேண்டும்!' - தர்ணா போராட்டத்தில் இறங்கிய அறநிலையத் துறை சங்கங்கள்

அறநிலையத் துறையின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் பிரசாரத்தைக் கண்டித்தும், அறநிலையத் துறையின் பணியை விளக்கியும், இன்று காலை தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா

சென்னை, திருச்சி, சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் அறநிலையத் துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், அமைச்சுப் பணியாளர்கள் சங்கம், முதுநிலைத் திருக்கோயில் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டன.

''சமீப காலமாக, அறநிலையத் துறைமீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். திருக்கோயில் நிர்வாகத்தை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று சிலர் கூறிவருகின்றனர். அதுபோல, பல ஆண்டுகளுக்கு முன் திருக்கோயிலில் திருடுபோனதற்கு, தற்போது பணியில் இருப்பவர்களைக் கைதுசெய்கின்றனர். இது ஏற்புடையதல்ல. முறையாக விசாரணை நடத்தி, அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறையில் பணிபுரிபவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை. காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்'' என்று பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தர்ணா போராட்டம் நடைபெற்றது.