`நீட் - தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் தர வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல் | Full mark for wrong questions in NEET exam urges CPM

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (19/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (19/05/2018)

`நீட் - தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் தர வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல்

சி.பி.எம். மாநிலக்குழு

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள்            கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சௌந்தரராசன் ஆகியோர் உட்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நீட் சிபிஎம்

இதில், சேலம் பசுமைச் சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், “ சேலம் முதல் சென்னை வரை பசுமை 8 வழிச்சாலையை பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் 274 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இது, சேலம் மாவட்டம் - 38 கி.மீ, தருமபுரி 53 கி.மீ, திருவண்ணாமலை - 122 கி.மீ, காஞ்சிபுரம் 59 கி.மீ என்கிற அளவில் அமையும். வன நிலங்கள், பெரும்பகுதி நஞ்சை நிலங்கள் உள்பட்டு 12, 000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள், 5000-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு பல ஏரிகள், கண்மாய்களையும் ஆக்கிரமித்து பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி பசுமை சாலைகள் அமைப்பதற்கு  விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஏற்கெனவே சேலத்திலிருந்து - விழுப்புரம் வழியாக சென்னைக்கும், சேலத்திலிருந்து - கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சென்னைக்கும் 4 வழிச் சாலைகள் உள்ளன. இந்த இரண்டு சாலைகளையும் மேம்படுத்தினாலே தேவையை ஈடுகட்ட முடியும். எனவே, 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், “ நீட் தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வுசெய்து 25,000 மாணவர்கள் எழுதினர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வினாத்தாளில்  49 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டன. இத்தவறுகளுக்கு சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் அலட்சியமே முழுக் காரணமாகும். எனவே, சி.பி.எஸ்.இ நிர்வாகம் தனது நிர்வாகக் குளறுபடிகளை ஒப்புக்கொண்டு சரிசெய்வதோடு, தமிழில் தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தவறுக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை வழங்கிட வலியுறுத்தி மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், தமிழக தொழில் முனைவோர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திட முடிவுசெய்துள்ளனர். இந்த ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வணிகப் பெருமக்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரி கணக்கிற்கான படிவத்தை சமர்ப்பிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்த முடியும். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு மோசமான கல்விச் சூழலையே உருவாக்கியுள்ளது. மாணவர்களோடு பெற்றோர்களின் உயிரையும் பறித்துவருகிறது. தேர்வு என்ற பெயரில் வன்முறையை அனுமதிக்க முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்றும், ” தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேல் உறுப்பினராக உள்ள அனைத்து சங்கங்களிலிருந்தும் கூட்டுறவுக் கடன்கள் எதையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய பயிர்க் கடன் பெற முடியாத நிலையில், கிராமப்புற விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவது உள்ளிட்டு, முறையாகச் செயல்பட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.