வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (20/05/2018)

கடைசி தொடர்பு:00:30 (20/05/2018)

ஆழ்வார்திருநகரி கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா கொடியேற்றம்!

ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா இன்று (19.05.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 12 நாள்கள் வரை திருவிழா நடைபெறும். 

ஆழ்வார்திருநகரி கோயில் கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றி நவ திருப்பதிகள் எனப்படும் 9 பெருமாள் கோயில்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இவற்றில், 9-வது தலமாகவும் குரு ஸ்தலமாகவும் மற்றும் நம்மாழ்வார் அவதரித்த தலமாகவும் திகழும் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீ ஆதிநாதர் திருக்கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைக்குப் பிறகு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இரவில், நம்மாழ்வார் வீதியுலா நடக்கிறது. இன்று முதல் 12 நாள்கள் வரை திருவிழா நடைபெறும். 

2-ம் நாள் திருவிழா, வரும் 20-ம் தேதி இரவு புஷ்பப் பல்லக்கிலும், 3-ம் நாள் திருவிழா, வரும் 21-ம் தேதி இரவில் தங்கப் புன்னை மர வாகனத்திலும் நம்மாழ்வார் வீதியுலா நடைபெறுகிறது. 5-ம் நாள் திருவிழா, வரும் 23-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம் இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தப் பெருமாள், பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தப் பெருமாள், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணப் பெருமாள், தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனர், இரட்டைத் திருப்பதி தேவர் பிரான், திருக்கோளூர் ஸ்ரீவைத்திய மாநிதிப் பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாஸன நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து, பகல் 11.30 மணிக்கு நம்மாழ்வார் வீதி உலாவும், இரவில்  9 கருடசேவையும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கப்பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி  நடைபெறும். வரும் 28-ம் தேதியான 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம், தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, பெரிய சந்நிதிக்கு  எழுந்தருளி, கோஷ்டி தீர்த்த விநியோகம்  நடைபெறும். இரவில், வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் மற்றும் வெள்ளி தோளுக்கினியான் வாகனத்தில் நம்மாழ்வார் உடையவர் ஆகிய மூர்த்திகள் வீதியுலா வருதல் நடைபெறும்.

11-ம் நாள் திருவிழா, வரும் 29-ம் தேதி சுவாமி நம்மாழ்வார், மத்மணவாள மாமுனிகள் சந்நிதிக்கு எழுந்தருளி, கந்தப்பொடி உத்ஸ்சவம் மற்றும் இரவில் சுவாமி நம்மாழ்வார் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  12-ம் நாள் திருவிழாவான  30-ம் தேதி மதியம், தீர்த்தாவாரியுடன் வைகாசி அவதாரத் திருவிழா நிறைவுபெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க