மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புப் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் அதிகரித்து இருப்பதால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை ஏற்படும் என இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் அதிகரித்திருப்பதால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை ஏற்படும் என இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கல்விக் கட்டணம் அதிகரிப்பு

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் 4 உறுப்புக் கல்லூரிகளும் 6 மனோ கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன. மிகவும் பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்படும் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, பணகுடி, .திசையன்விளை, கடையநல்லூர், புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டத்தின் நாகலாபுரம், நாகம்பட்டி, சாத்தான்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. 

பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2000-வது ஆண்டில் மனோ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கல்லூரிகளில் படித்து ஏராளமானோர் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவரான திருமலை நம்பி கூறுகையில், ’’கிராமப் பகுதி மாணவர்களால் நகரங்களுக்கு வந்து படிக்கவோ அல்லது நகரங்களில் தங்கியிருந்து கல்வி பயிலவோ வாய்ப்பு குறைவு என்பதால், உறுப்புக் கல்லூரிகளையும் மனோ கல்லூரிகளையும் பல்கலைக் கழகம் தொடங்கியது. ஆனால், அந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இந்தக் கல்லூரிகளில் கட்டண உயர்வு என்பது பெரும் சுமையாக மாறிவருகிறது. 

பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக பாஸ்கர் பொறுப்பேற்ற பின்னர், மூன்று முறை கட்டண உயர்வை அமல்படுத்தி, மாணவர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார். குறைவான கட்டணத்தில் மாணவர்கள் கல்வி கற்ற நிலையை மாற்றும் வகையில், 2016-17-ம் கல்வியாண்டில் 4,425 ரூபாயாக இளங்கலை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம் 4,925 என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. அதுவே, 2017-18-ம் ஆண்டில் 7,825 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. 

மீண்டும் கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 2018-19-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக இளங்கலை பாடங்களுக்கு 7,125 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்சி கம்ப்யூட்டர் கல்விக்கான கட்டணமாக 10,425 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலைக் கல்விக் கட்டணமாக 12,225 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டணம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளைவிடவும் அதிகம். 

இந்த கட்டணச் சுமையை மாணவர்களால் சமாளிக்க முடியாது. அதனால் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும்.  உயர்த்திய கட்டணங்களை முழுவதும் வாபஸ் பெறவேண்டும். கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால், அனைத்து மனோ கல்லூரிகளிலும் கடுமையான போராட்டம் நடைபெறும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!