வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (19/05/2018)

`வீட்டு வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவோம்!’ - கதிராமங்கலத்தில் ஓராண்டாகத் தொடரும் போராட்டம்

ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையில் இன்று, 365-வது நாள் போராட்ட நிகழ்ச்சியை நடத்தினர். அப்பகுதியில், மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கதிராமங்கலத்தில் போராட்டம்

`ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவாயு எடுத்துவருகிறது. இதனால், பெரும் பாதிப்புக்குள்ளான கதிராமங்கலத்தில் நிலம், நீர், காற்று போன்றவை கடுமையாக மாசுபட்டுள்ளது. குடிநீரில், எண்ணெய் கலந்து வருகிறது. இதனால், நாங்கள் பல துன்பங்களை  அனுபவித்துவருகிறோம் என கதிராமங்கலம் ஐயனார் கோயில் திடலில், 'ஓ.என்.ஜி.சி வெளியேற வேண்டும், புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது, புதிய எண்ணெய்க் கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும்’ என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்போடு சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே 19-ம் தேதி போராட ஆரம்பித்தனர்.
போராட்டம்குறித்து அவர்களிடம் பேசினோம். `நாங்கள் போராட்டம் தொடங்கி ஒரு வருஷமாச்சு. போன வருஷம் மே மாதம் தொடங்கிய போராட்டத்திலிருந்து, இன்று வரை கதிராமங்கலம் ஒரு போர்களமாகவே காணப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்கள். வீடு புகுந்து பலரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். `எங்க ஊரைச் சேர்ந்தவர்கள், எந்த நிகழ்ச்சிக்கும் வெளியே எங்கும் போகாதபடி இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதுபோல வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டோம். எங்க பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினோம். விவசாய நிலத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து தண்ணீர் பாய்ந்தோடவேண்டிய வயலில், எண்ணெய் பாய்ந்தோடியது. அப்போது,  ஓ.என்.ஜி.சி குழாயை போலீஸாரே கொழுத்திவிட்டு, அறவழியில் போராடிய எங்கள்மீது பலி சுமத்தி தாக்குதல் நடத்தினர்.


எங்களின் கூக்குரல் கேட்டு பல அரசியல் கட்சித் தலைவர்கள், எங்கள் போராட்டத் திடலுக்கு வந்து எங்களுக்காகப் போராடி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம் நடத்தினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்க வீட்டுப் பெண்கள் பணிக்குச் செல்வதுபோல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் போராட்டத் திடலுக்கு வந்துவிடுவார்கள். வயதான மூதாட்டி ஒருவர், ஒருநாள் தவறாமல் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவர், `என் காலம் முடிந்துவிட்டது. என் பேரப்பிள்ளைகளான இந்த ஊர் பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும். அதான், ஒருநாள் விடாமல் கலந்துகொண்டேன். முற்றிலுமாக ஓ.என்.ஜி.சி வெளியேறும் வரை வருவேன்’ என தில்லாகத் தெரிவித்தார்’ என்று போராட்ட களத்தில் இருந்து ஒரு வருட நிகழ்வுகளைக் கண் கலங்கியபடி கூறினார்கள்.
மேலும், ``கதிராமங்கலத்தில் போராட ஆரம்பித்து இன்றோடு 365 நாள்கள் ஆகின்றன. இதற்காகப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்து அறவழியில் 365 நாள் நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஆனால், நாங்கள் தேச விரோதிகள் போல எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் பெரிய போலீஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்தை போர்க்களமாக மாற்றுவதுபோல அவர்கள் செயல்பாடுகள் உள்ளன. காவலர்களைக் குவிப்பதன்மூலம் எங்களை அஞ்சவைக்க நினைக்கிறது அரசு.

கடந்த வாரம், இதேபோல ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து, எண்ணெய் வெளியேறியது. பழைய குழாயை எடுத்துவிட்டு, புதிய குழாய் பதிக்கும்போது ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உரிமைக்காகப் போராடும் எங்களுக்கு காவல் துறை மூலம் அரசு எந்தப் பாதுகாப்பையும் இந்த ஓராண்டில் கொடுக்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பாரத் மாலா என்கிற பெயரில் நான்கு வழிச் சாலைகள் அமைப்பதற்காக கதிராமங்கலத்தின் விளை நிலங்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர்’’ என்றனர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த 365 நாள் நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக, `ஓ.என்.ஜி.சி-யை கதிராமங்கலத்தை விட்டு முற்றிலுமாக வெளியேற்றுவோம். அது வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க