`ஆட்சியர் உறுதியளிக்காவிட்டால் போராட்டம் தொடரும்' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு! | siege protest will continue says anti sterlite movement

வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (20/05/2018)

கடைசி தொடர்பு:01:19 (20/05/2018)

`ஆட்சியர் உறுதியளிக்காவிட்டால் போராட்டம் தொடரும்' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு!

`ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்காவிட்டால் சொன்னபடியே ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி, மடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பொன்பாண்டி,  ``தூத்துக்குடியில் இயங்கி வரும் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 22 கிராம மக்கள் கடந்த 100 நாட்களாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கவில்லை. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் என யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு குறித்து முடிவெடுக்கவில்லை. ஆலைக்கு எதிராகப் போராடிவரும் அனைத்துக் கிராம மக்களும் ஒருமனதாக, வரும் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளோம். 

அதன்படி, ஜனநாயக ரீதியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறோம். இப்போராட்டம் வாயிலாக ஆலையை மூட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்கும் ஓர் முறை மட்டுமே. ஆலையை நோக்கி நாங்கள் யாரும் செல்லப்போவது இல்லை. 

ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்கப் போவதாக சில விஷமிகள், ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் வீண்  வதந்தியைப் பரப்பி வருகின்றனர். எங்களது போராட்டம் அறவழிப் போராட்டம் மட்டுமே. வன்முறை என்பது எங்களின் நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலிகளும், உளவுத்துறைப் போலீஸாரும் இணைந்து எங்களின் அமைதியானப் போராட்டத்தை சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசமிகளைக் கண்டறியும் வகையில் எமது கூட்டமைப்பு சார்பில், 20 வீடியோ கிராபர்களை நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளோம். 

வரும் 21-ம் தேதி, ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர்  எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம். இல்லாவிட்டால், 22-ம் தேதி முற்றுகைப் போராட்டம் உறுதியாக நடைபெறும். அன்று முழுக்கடையடைப்பு நடத்த வணிகர்கள்  சங்கம் முடிவு செய்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள், மீனவர்கள், விவசாயிகள், திருநங்கைகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மக்கள் போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மாநிலம் முழுவதும் விரிவடையும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க