வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (20/05/2018)

கடைசி தொடர்பு:02:00 (20/05/2018)

வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் - மதுரை நந்தினி அறிவிப்பு!

தேர்தலில் வாக்கு இயந்திரம் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மதுரையைச்சேர்ந்த சமூக ஆர்வலர்  நந்தினி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்கு இயந்திரம் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம் முன் ஜுன் 25-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மதுரையைச்சேர்ந்த சமூக ஆர்வலர்  நந்தினி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

மதுரை நந்தினி

மதுவுக்கு எதிராகவும், மது விற்கும் அரசுக்கு எதிராகவும் ஆட்சியாளர்கள்  செல்லும்  இடங்களுக்குச் சென்று போராட்டங்களை நடத்தி, காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு பல வழக்குகளைச் சந்தித்து வரும் மதுரை நந்தினி, மதுவின் தீமை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பி வருகிறார். வேலையில்லா திண்டாட்டம் உட்படப் பல சமூக பிரச்சனைகளுக்காகவும் போராடி வருகிறார். இந்த நிலையில் வருகிற ஜுன் மாதம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் விதமாகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். 

இது பற்றி அவரிடம் பேசினோம்,  ``நாட்டில் நல்ல ஆட்சி அமைய வேண்டுமானால் வாக்கு இயந்திரத்தைத் தடை செய்து, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். விஞ்ஞானம் வளர்ந்துள்ள ஜப்பான் உட்படப் பல நாடுகளில் இயந்திர வாக்கு முறையைக் தடை செய்துள்ளனர். இயந்திரத்தில் எந்த முறைகேடுகளும் செய்யலாம். வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்துவதுதான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜுன் 25-ம் தேதி டெல்லியிலுள்ள தலைமைத்தேர்தல் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்''  என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க