வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (20/05/2018)

கடைசி தொடர்பு:03:30 (20/05/2018)

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை - 3 பேர் உயிரிழப்பு!

சேலத்தில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் மழை வீசியது.  இதில் சேலம் - கோவை மெயின் ரோட்டில் நெய்காரப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள அடையார் ஆனந்தபவன் மேற்கூரை  இடிந்து விழுந்ததில்  3 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் இன்று மாலை திடீரென சூறாவளி காற்றைப் போன்று பேய்க் காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் சேலம் - கோவைச் செல்லும் மெயின் ரோட்டில் நெய்காரப்பட்டி என்ற இடத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலின் மாடியில் இருந்த சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. ஹோட்டலின் மேற்கூரை தகரத்தினால் பொருத்தப்பட்டிருந்த காரணத்தினால் சுவர் விழுந்ததில் ஹோட்டலின் ஒரு பகுதி சரிந்தது.அப்போது உணவு அருந்திக் கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த நூருல் அமீது மற்றும் ஹோட்டல் ஊழியர்  அர்ஜூன் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

இதேபோல் இடிபாடுகளில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த சையத் அலி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹோட்டல் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளை மீட்டனர். உரியப் பாதுகாப்பு இன்றி கட்டிடம் கட்டப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள். 

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சேலத்தில் இன்று மாலை வீசிய சூறைக்காற்றிற்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் பல்வேறு இடங்களில் வலுவிழந்த கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. விளம்பர பதாதைகளும் கிழிந்து சேதம் அடைந்துள்ளது.