வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (20/05/2018)

கடைசி தொடர்பு:05:45 (20/05/2018)

`லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை' - அரசு ஊழியர்களை எச்சரிக்கும் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "அரசு அதிகாரிகளில் சிலபேர் லஞ்சம் வாங்கி வருவதால் மொத்தமாக அரசு நிர்வாகத்தின் பெயர் கெடுகிறது. இந்தநிலை நீடிப்பது நல்லதல்ல. இனி லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரித்திருக்கிறார்.

கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அப்போது, "உயர் அதிகாரிகள், கீழ்மட்ட ஊழியர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் யார் லஞ்சம் வாங்கினாலும் இனி கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாவார்கள். இதில் எந்தவித சமரசமும் அரசு காட்டாது. இவ்வாறு லஞ்சத்தில் திளைக்கும் சில அரசு அதிகாரிகளின் செயல்கள் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கே தவறான பெயரை எற்படுத்துகிறது. அரசு அதிகாரிகளின் தேவைக்கு ஏற்றவாறு நியாயமான, உரிய சம்பளம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இதை மனதில் வைத்து கண்ணியமான முறையில் லஞ்சம் பெறாமல் வாழ்வதற்கு அந்த அதிகாரிகள் கற்றுகொள்ள வேண்டும்" என பேசியிருக்கிறார்.